சென்னை: தூத்துக்குடியில் அமையவுள்ள ஹெச்டி ஹூண்டாய் கப்பல் கட்டும் தளத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடியில் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக தமிழக அரசுடன் தென் கொரியாவைச் சேர்ந்த ஹெச்டி ஹூண்டாய் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது. 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தை உறுதி செய்ய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தென் கொரியா சென்று, அந்த நிறுவனத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். முதலீட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் நிறுவனத்துக்கு செய்யப்படும் என உறுதி அளித்து இருந்தார்.
ஜூன் மாதம், சென்னை வந்திருந்த ஹூண்டாய்குழுமத்தினர் முதல்வர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:தூத்துக்குடியின் கனவு இப்போது செயலுக்கு வந்துள்ளது! முதல்வர் விஜயின் சிறந்த தலைமையின் கீழ், தூத்துக்குடியில் அமையவுள்ள ஹெச்டி ஹூண்டாய் கப்பல் கட்டும் தளத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கான ஆரம்பக்கட்ட ஆய்வுகளும் (DFR), விரிவான திட்டப் பணிகளும் (DPR) தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.புதிதாக உருவாக்கப்படும் தூத்துக்குடி கப்பல் கட்டும் மையத்தில், ஹெச்டி ஹூண்டாய் நிறுவனம் தனது முதன்மைத் திட்டத்தை முழு நம்பிக்கையுடன் செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தின் தூத்துக்குடி- இனி இந்தியாவின் அடுத்த மிகப்பெரிய கப்பல் கட்டும் மையம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
