சென்னையில் தூய்மை பணியாளர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிரந்தர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 15 நாட்களாக போராடி வரும் அவர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டமன்றத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், தற்போது அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
கடந்த ஆட்சியில் இருந்தே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தவெக தலைவரான விஜய், பனையூர் அலுவலகத்திற்கு போராடிய தூய்மை பணியாளர்களை அழைத்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்தார்.
இந்நிலையில் தற்போது தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை முதல்வர் அழைத்து பேசவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களும் இதனை கடும் விமர்சனமாக முன்வைத்தனர். அதோடு விசில் ஊதி தங்களுடைய போராட்டத்தை முன்னெடுத்து பரபரப்பினை கிளப்பினார்கள்.
இப்படியான நிலையில் அமைச்சர்கள் குழு தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் போராட்டக்காரர்களுடன் அமைச்சர்கள் பேசவிருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் , ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் இன்று காலை 11.30 மணி அளவில் இந்த பேச்சுவார்த்தையை நடத்தவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் முறையான விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே அவர்களுடன் தமிழ்நாடு அரசு சார்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் , லயோலா மணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதில் எந்த விதமான முடிவும் எட்டப்படவில்லை. இதனிடையில் தற்போது நான்கு அமைச்சர்கள் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
இதன் முடிவில் சுமூகமான தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். முதல்வர் ஏன் இன்னும் அவர்களை சந்திக்கவில்லை உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இருந்தார். இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளிக்கும்போது கடந்த ஆட்சியில் 150 நாட்கள் தூய்மை பணியாளர்கள் போராடினார்கள் என்றார்.
அதற்கு உதயநிதி ஸ்டாலின், அப்போது இன்னும் தூய்மை பணியாளர்கள் 150 நாட்கள் போராடினால் தான் தீர்வு காண்பீர்களா என காட்டமாக விமர்சனத்தை முன்வைத்தார். இப்படியான நிலையில் இன்று தவெக அமைச்சர்கள், போராடும் தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
