தென்னிந்தியாவை விடச் சிறந்த கோயில்கள்; போர்த்துகீசிய ஆட்சியில் கோவா இழந்த பொக்கிஷங்கள்: முதல்வர் பிரமோத் சாவந்த் பேச்சு

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், “நமது வரலாற்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்பதை வலியுறுத்தி, கதம்ப வம்சத்தின் ஆட்சிக் காலத்தில் கோவா ஒரு “பொற்காலத்தை” கண்டது என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். போர்த்துகீசியர்கள் கோவாவிற்கு வராமல் இருந்திருந்தால், தென்னிந்தியாவில் உள்ள கோவில்களைப் போலவே பல கோவில்கள் கோவாவிலும் இருந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

திவாரில், ‘கோடி தீர்த்த காரிடார் வளர்ச்சித் திட்டத்தின்’ தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ‘உதக்சாந்தி மற்றும் கங்காபூஜன்’ செய்த சாவந்த், போர்த்துகீசிய ஆட்சியின் போது பல கோவில்கள் அழிக்கப்பட்டதாகக் கூறினார்.

“கோவா பல ராஜ்ஜியங்களால் ஆளப்பட்டது. கதம்ப வம்சத்தின் ஆட்சியின் போது 10 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் மாநிலத்தின் பொற்காலமாக இருந்தது. முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஜெயகேசி மன்னர்கள் கோவாவை ஆண்டனர். போர்த்துகீசியர்கள் ஆயிரம் கோவில்களை அழித்தார்கள் என்று நாம் சொன்னால், இந்த கோவில்களை கட்டியது யார்? கதம்ப மன்னர்களின் ஆட்சியின் போது கோவா மக்கள் தான் இதை கட்டினார்கள். அதுவே உண்மையான பொற்காலம். உங்கள் வரலாற்றை நினைவில் கொள்ளுங்கள்,” என்று சாவந்த் கூறினார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

போர்த்துகீசிய ஆட்சியின் கீழ் கோவா மக்கள் தலைமுறை தலைமுறையாக ‘துன்பப்பட்டனர்’ என்று சாவந்த் கூறினார். “போர்த்துகீசியர்கள் இங்கு வராமல் இருந்திருந்தால், தென்னிந்தியாவில் காணப்படுவதை விட சிறந்த கோவில்களை கோவாவில் பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கும். துரதிர்ஷ்டவசமாக, அடில் ஷாவைத் தொடர்ந்து வந்த போர்த்துகீசியர்கள் தான் கோவாவில் முதன்முதலில் மதமாற்றங்களைக் கொண்டு வந்தனர். அவர்கள் பல ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டுமானால், மக்களை மதமாற்றம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, மதமாற்றத்தை தங்களின் முக்கிய நோக்கமாக மாற்றிக்கொண்டனர்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், போர்த்துகீசிய ஆட்சிக் காலத்தில் அழிக்கப்பட்ட புதிய சப்தகோடீஸ்வரர் கோவில் திவாரில் உள்ள பழைய வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் கட்டப்படும் ‘கோடி தீர்த்த காரிடார்’ வளர்ச்சிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக சாவந்த் அறிவித்திருந்தார். கோவாவில் சுமார் 1,000 கோவில்கள் போர்த்துகீசியர்களால் அழிக்கப்பட்டதாகவும், அத்தகைய வழிபாட்டுத் தலங்களை மீட்டெடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உள்ளது என்றும் சாவந்த் கூறினார்.

வரலாற்றுப் பதிவுகளின்படி, திவாரில் உள்ள நரோவாவில் உள்ள சப்தகோடீஸ்வரர் கோவில் இருந்த இடம் கதம்ப வம்சத்தின் (10 முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை) காலத்தில் இருந்தது. கோவிலின் பாறையில் வெட்டப்பட்ட குளம் ‘கோடி-தீர்த்தம்’ என்று அழைக்கப்பட்டது. பாமினி ஆட்சியின் போது இந்த கோவில் அழிக்கப்பட்டது, பின்னர் 1391 இல் விஜயநகர பேரரசின் ஒரு அமைச்சரால் மீண்டும் கட்டப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் இந்த கோவிலை அழித்தனர். இறைவனின் சிலை ஆற்றைக் கடந்து பிச்சோலிமிற்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு 1668 இல் சிவாஜி ஒரு புதிய கோவிலை நிறுவினார்.

“நாடு முழுவதிலும் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டம் யாராவது இருந்தால், அது கோவா மக்கள் தான். மற்றவர்கள் 150 ஆண்டுகால ஆங்கிலேயர் ஆட்சியில் மட்டுமே துன்பப்பட்டனர், ஆனால் கோவாவில், நாங்கள் 450 ஆண்டுகால அன்னிய ஆட்சியைக் கண்டோம். இன்ஃக்விசிஷன் (Inquisition) என்றால் என்ன என்பது கோவா மக்களுக்குத் தெரியும்… நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு அது என்னவென்று தெரியாது,” என்று சாவந்த் கூறினார்.

மராத்திய போர்வீரரான சிவாஜி தான் மாநிலத்தில் மதமாற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்று அவர் கூறினார். “கோவாவின் வரலாற்றை நாம் விவரிக்கும் போது, போர்த்துகீசிய வரலாறு மட்டுமே மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. போர்த்துகீசியர்களுக்கு முன் அடில் ஷா இருந்தார். அடில் ஷாவின் அரண்மனையே அவரால் கட்டப்பட்டதல்ல, கதம்பர்களின் ஆட்சியின் போது கட்டப்பட்டது. அவருக்கு முன் வந்த அனைத்து மன்னர்களையும் ஆட்சியாளர்களையும் நாம் நினைவு கூர வேண்டும்,” என்று சாவந்த் மேலும் கூறினார்.

வியாழக்கிழமையன்று சாவந்த், திவாரில் உள்ள சப்தகோடீஸ்வரர் கோவிலின் பழைய இடத்தில் சீரமைப்புப் பணிகளின் போது, ஒரு பண்டைய கோவில் வளாகம் மற்றும் காரிடார் இருந்ததைக் குறிக்கும் 14 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட சில பழங்கால கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தொல்பொருள் கண்டுபிடிப்புகளில், கோவில் வாசல்களுக்கு மேலே பாரம்பரியமாக செதுக்கப்படும் ‘கீர்த்திமுக’ உருவம் மற்றும் கோவில் தூணின் செதுக்கப்பட்ட மேல் பகுதி ஆகியவை அடங்கும்.

Source link