தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டு பிரச்னை; நடுவர் மன்றத்துக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு

டில்லி சிறப்பு நிருபர்

தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டு பிரச்னையை, மஹதாயி நடுவர் மன்றத்துக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனுத் தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தின் தென்பெண்ணையாற்றின் கிளை நதியான மார்க்கண்டேயாவின் குறுக்கே யர்கோல் என்ற இடத்தில் கர்நாடக அரசு அணைக் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகம் – கர்நாடகா இடையே பெண்ணையாறு விவகாரத்தில் தீர்வு காண குழுவை அமைக்க 2024ல் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த சூழலில், தென்பெண்ணையாறு வழக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘நீர் பங்கீடு குறித்து தீர்வு காண்பதற்காக குழு அமைக்கப்பட்டு இரு கட்டங்களாக பேச்சு நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு, நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’ என, கோரியது. இதற்கு கர்நாடக அரசு ஆட்சேபனை தெரிவித்தது.

இதையடுத்து, ‘தென்பெண்ணையாறு நீர் பிரச்னையை தீர்க்க, ஒரு மாதத்திற்குள் தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும்’ என, மத்திய அரசுக்கு கடந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசு கூடுதல் அவகாசம் வழங்க கோரியதை அடுத்து, உச்ச நீதிமன்றம் கூடுதலாக ஆறு மாதம் அவகாசம் வழங்கியது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தென்பெண்ணையாறு விவகாரத்தை, மஹதாயி நடுவர் மன்றத்துக்கு மாற்ற அனுமதி கோரியுள்ளது. இந்த மனு, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை அமைத்து, அதற்கான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்துவது காலதாமதத்தை உண்டாக்கும். எனவே, தற்போது பணிகள் இல்லாமல் உள்ள மஹதாயி நடுவர் மன்றத்திற்குப் பெண்ணையாறு விவகாரத்தைப் பரிந்துரைப்பது விரைவாகவும், நிதி ரீதியாகச் சிக்கனமாகவும் முடிவெடுக்க உதவும்.

ஒருவேளை புதிய தீர்ப்பாயமே அமைக்கப்பட வேண்டும் என கருதினால், உறுப்பினர்கள் நியமிப்பது போன்ற சட்டப்பூர்வ நடைமுறைகளை முடிக்க, ஏற்கனவே வழங்கப்பட்ட ஆறு மாத அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.” என, கோரினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, ‘தென்பெண்ணையாறு விவகாரத்தில் புதிய மற்றும் நிரந்தரமான தனித் தீர்ப்பாயம் அமைக்கப்படுவதே சரியானதாக இருக்கும். பழைய தீர்ப்பாயத்தை பயன்படுத்தும்போது தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தில் பல்வேறு சிக்கல்கள் எழும்’ என வாதிட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனு குறித்து இரு வாரங்களுக்குள் பதில்களை தாக்கல் செய்ய தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

கோவா – கர்நாடகா – மஹாராஷ்டிரா இடையிலான மஹதாயி நதிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதே மஹதாயி தீர்ப்பாயம் என்று அழைக்கப்படுகிறது.

Source link