ஹைதராபாத்: தெலுங்கானா மாநில அமைச்சராக இருக்கும் கொண்டா சுரேகாவின் மகள், முதல்வர் ரேவந்த் ரெட்டியை விமர்சித்து பேசினார். இதனால் கொண்டா சுரேகா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
தெலுங்கானா மாநில வனத்துறை அமைச்சராக இருப்பவர் கொண்டா சுரேகா. இவரது மகள் சுஷ்மிதா. சமீபத்தில் அவர் முதல்வர் ரேவந்த் ரெட்டியை விமர்சித்து பேசியிருந்தார்.
பார்கல் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசும்போது, அத்தொகுதி எம்எல்ஏ ரேவரி பிரகாஷ் ரெட்டியை அடுத்த தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக சுஷ்மிதா கூறும்போது, என்னுடைய கொண்டா பகுதிக்கு வருவது ஏன்? பிரகாஷ் ரெட்டியை மீண்டும் தேர்வு செய்யச் சொல்வது ஏன் என ரேவ்ந்த் ரெட்டிக்கு கேள்வி எழுப்பினார்.
மேலும், முதல்வரும், அவரது சகோதரரும் அரசை சுரண்டி கொண்டிருப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. நீங்கள் ஏன் எங்களுடன் சண்டைக்கு வருகிறீர்கள். எங்களுக்கு ஏன் இப்படி செய்கிறீர்கள். தனது சமுதாயத்தினருக்கு விவசாயம் தெரியும் ஆனால், அவர்களைப் போல் அடிபணிந்து இருக்கத் தெரியாது. முதல்வரை சுற்றி உள்ளவர்கள் தரகர்களாக உள்ளனர். தவறாக வழிநடத்துகின்றனர் எனக்குற்றம்சாட்டி இருந்தார்.
இதனையடுத்து காங்கிரஸ் அரசை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி ,பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்க துவங்கின.
இந்த விவகாரத்தில் தலையிட்ட காங்கிரஸ் மேலிடம், சுஷ்மிதாவின் தாயாரான அமைச்சர் கொண்டா சுரேகாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு விளக்கம் அளித்த சுரேகா, ” சுஷ்மிதாவின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து” எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், கொண்டா சுரேகாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும்படி கவர்னர் சிவ பிரதாப் சுக்லாவுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி பரிந்துரை செய்துள்ளார்.
