தேசிய தேர்வு முகமையின் 47 அதிகாரிகள் டிஸ்மிஸ்? வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் நடவடிக்கை?

புதுடில்லி: ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், அத்தேர்வை நடத்தும், என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமையைச் சேர்ந்த, 47 அதிகாரிகள் பணியில் இருந்து, ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் சிலர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘நீட், ஜே.இ.இ., மெயின், கியூட்’ உட்பட, 15க்கும் மேற்பட்ட தேசிய அளவில், தேர்வுகளை என்.டி.ஏ., நடத்தி வருகிறது. இதன் மூலம், நாட்டின் மிகப்பெரிய தேர்வு முகமைகளில் ஒன்றாக இது விளங்குகிறது.

தேசிய அளவில் பல முக்கிய தேர்வுகளை நடத்தினாலும், ‘நீட்’ எனப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் கசிவது தொடர்கதையாகி வருகிறது.

மறுசீரமைப்பு

கடந்த மே மாதத்தில் நடந்த நீட் இளநிலை தேர்வின் வினாத்தாள் கசிந்ததை அடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, ஜூன் 21ல் மறு தேர்வும் நடந்தது. இதையடுத்து, அடுத்தாண்டு முதல் நீட் இளநிலை தேர்வு, கணினி வழி முறையில் நடத்தப்பட உள்ளது. மேலும், ஒரு வாரத்துக்கு தேர்வை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வினாத்தாள் கசிவால் சர்ச்சையில் சிக்கிய தேசிய தேர்வு முகமையை மறுசீரமைக்க முடிவு செய்த மத்திய அரசு, அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் தான், நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக, டில்லி ஜந்தர் மந்தரில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம், மத்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியது.

பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இந்தளவுக்கு விரிவடையும் என, மத்திய அரசு நினைத்து கூட பார்க்கவில்லை.

நீட் வினாத்தாள் கசிவை தொடர்ந்து, மத்திய அரசின் தீவிர கண்காணிப்பின் கீழ் தேசிய தேர்வு முகமை வந்தது. அதை முழுமையாக மறுசீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தேசிய தேர்வு முகமையைச் சேர்ந்த, 47 அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கி, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் சிலர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று கூறியதாவது: தேசிய தேர்வு முகமையை முழுமையாக மறுசீரமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து நடைமுறைகளிலும் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதே அரசின் நோக்கம்.

அதன் ஒரு பகுதியாகவே, 47 அதிகாரிகள் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இது தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல. ஒட்டுமொத்த அமைப்பையும் அடிப்படையிலிருந்து சீரமைப்பதே இதன் நோக்கம்.

நம்பகத்தன்மை

தேசிய தேர்வு முகமையில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வையும் மேம்படுத்துவதோடு, வினாத்தாள் கசிவு இல்லாத தேர்வு சூழலை உருவாக்க, கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

திட்டமிட்டபடி இந்த மாற்றங்கள் நடந்தால், தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளின் பாதுகாப்பையும், நம்பகத்தன்மையையும் பலப்படுத்தும் வகையில், தேசிய தேர்வு முகமை தொடங்கப்பட்டதில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கிய நடவடிக்கையாக இருக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Source link