தேவாலயக் கட்டுமானப் பணியில் வி*பத்து : மீட்புப் பணிகள் தீவிரம்!

வேலூர் மாவட்டம் மஞ்சு கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் சி.எஸ்.ஐ. சீயோன் மலை சர்ச் நிர்வாகத்தின் சார்பில் போதகர் ஜோன்ஸ் கிருபாகர் என்பவரால் புதிதாக தேவாலயம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதன்படி தேவாலயத்தின் முதல் தளத்தை அமைப்பதற்காக ஏற்கனவே சென்டரிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இரும்புக் கம்பிகள் கட்டப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து, கான்கிரீட் போடும் பணிகளைத் தொடங்குவதற்காகத் தொழிலாளர்கள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பலகைகளைத் தாங்கி நிற்பதற்காக அமைக்கப்பட்டிருந்த முட்டுகள் எதிர்பாராத விதமாக, சரிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மேலிருந்த கட்டுமான பொருட்கள் மற்றும் மரக்கட்டைகள் சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆறுக்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களான கிருஷ்ணராவ, மண்டல் பாலா, சாரதா உள்ளிட்ட நான்கு பேர் மீட்கப்பட்டு, அங்குள்ள சேர்க்காடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், சம்பவ இடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எத்தனை பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link