‘தேவா சார் பாடல்களை இவர் பொறுமையாக சொல்லித் தருவார்’: கிருஷ்ணராஜ் மறைவுக்கு பாடகி சித்ரா இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் காலமானார். அவருக்கு வயது 75. சேலம் வேம்படிதாளத்தை பூர்வீகமாகக் கொண்ட ஆர்.கிருஷ்ணராஜ், தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான குரலால் முத்திரை பதித்தவர். `வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’, ‘தஞ்சாவூர் மண்ணு எடுத்து’, ‘கண்ணும் கண்ணும் பார்த்துகிட்டா’, ‘சோக்கு சுந்தரி” உள்ளிட்ட பாடல்களை பாடியவர். 

சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த கிருஷ்ணராஜ், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். பிரபல இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா கடந்த 17-ந்தேதி காலமானார். அவரது இசையிலும் ஏராளமான பாடல்களை கிருஷ்ணராஜ் பாடியிருக்கிறார். 

சித்ரா 

இந்நிலையில், பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் மறைவுக்கு பிரபல பின்னணி பாடகி சித்ரா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “திரு. கிருஷ்ண ராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் ஒரு அற்புதமான மனிதர், திறமையான பின்னணிப் பாடகர், மேலும் தேவா அவர்களின் நம்பிக்கைக்குரிய இசை உதவியாளராக இருந்தவர்.

நாங்கள் பாடல்களைப் பதிவு செய்யும் வேளைகளில், தேவா அவர்களின் பாடல்களை எனக்கு மிகுந்த பொறுமையுடன் கற்றுக்கொடுப்பார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”  என்று கூறியிருக்கிறார். 

கவிஞர் வைரமுத்து இரங்கல் 

கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில், “ஒரே பாடல் பாடி உலகப் புகழ்பெற்றவரும் போய்விட்டாரே. தஞ்சாவூரு மண்ணுஎடுத்து பாடலைப் பாடிய கிருஷ்ணராஜ் மண்ணோடு மறைந்துவிட்டாரே. இப்படி விரைவாய் எப்படி மறைவாய்? தேவாவின் ஆர்மோனியச் சத்தம் அழைத்ததா சகோதரா? இவர் பாடிய பிறகு எஸ்.பி.பி-யைப் பாடவைக்கலாம் என்ற பேச்சு வந்தது “இல்லை தேவா; இல்லை. கிருஷ்ணராஜ் குரலில் பிசைந்த மண்ணின் பிசுபிசுப்பு இருக்கிறது. இவர்குரலே இருக்கட்டும்” என்று சொன்னவர்களில் நானும் ஒருவன்.

சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதன் இதயத்தில் இசைத் தட்டாய்ச் சுற்றிக்கொண்டே இருந்தது கிருஷ்ணராஜ் பாடிய பாட்டு “இத்தனை
ஊரை எழுதியிருக்கிறீர்களே; இதில் ஏதோ ஒன்றுதானே என் சொந்த ஊர்’ என்று தளும்பும் குரலில் கேட்டார் ஜனாதிபதி அவரது இறுதிச் சடங்கில் அதிகாரபூர்வமாக ஒலித்த பாட்டு இது 

ஒரு சுத்தத் தமிழன் பாடிய பாட்டு என்பது ஒவ்வொரு சொல்லின் தெறிப்பிலும் உணரப்படும். இசையமைத்த தேவா போய்விட்டார்;
இப்போது பாடகரும் போய்விட்டாரே எல்லா ஊரிலும் மண்ணெடுத்த நீ வாழ்வூரை விட்டுச் சாவூரில் மண்ணெடுத்துவிட்டாயே. நினைவழிந்து அமர்ந்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார். 

அனுராதா ஸ்ரீராம் இரங்கல் 

பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் தனது சமூக வலைதள பக்கத்தில், “தஞ்சாவூர் மண்ணெடுத்து, வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா போன்ற பாடல்களின் மூலம் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ், இன்று அதிகாலை காலமானார். அடையாறு இசைக்கல்லூரியில் தங்கப் பதக்கம் வென்ற அவர், ஆழ்ந்த இசை அறிவும், துடிப்பான குரல் வளமும் கொண்ட கலைஞர். பல தசாப்தங்களாக தேவா சாரின் உதவியாளராகப் பணியாற்றிய அவர், எனது தலைமுறையைச் சேர்ந்த பல பாடகர்களுக்கு வழிகாட்டியாகவும், சிறந்த முறையில் பாடுவதற்கு ஊக்கமளிப்பவராகவும் இருந்தார். 

தேவா சாரும் கிருஷ்ணராஜ் சாரும் தான், நான் பல்வேறு வகையான பாடல்களைத் திறம்படக் கையாள எனக்கு உதவினார்கள். அடுத்தடுத்து அவர்களை இழந்த துயரத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன். இத்தகைய அற்புதமான மனிதர்களுடன் என் வாழ்க்கைப் பயணத்தில் இணைந்து பயணிக்கும் வாய்ப்பைப் பெற்றதை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். அருணாச்சலத்தின் அருள் அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் கிடைக்கட்டும்.” என்று கூறியுள்ளார். 

நடிகர் சரத் குமார் இரங்கல் 

நடிகர் சரத் குமார் தனது சமூக வலைதள பக்கத்தில், “பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ்த் திரையுலகில் 300 – க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவரின் குரலில் நான் நடித்த ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ திரைப்படத்தின் ‘பாசமுள்ள சூரியனே’, ‘சிம்மராசி’ திரைப்படத்தின் ‘தாயே திரிசூலி’, ‘மூவேந்தர்’ திரைப்படத்தின் ‘சோக்கு சுந்தரி’, ‘நட்புக்காக’ திரைப்படத்தின் ‘கருடா கருடா’, ‘மீசைக்கார நண்பன்’ திரைப்படத்தின் சோகப் பாடல் மற்றும் ‘பெரிய கவுண்டர் பொண்ணு’ திரைப்படத்தின் ‘நாலு வார்த்தை பேசலையே’  பாடல்கள் மனதிற்கு நெருக்கமானவை. 

தனது குரல் வளத்தாலும், உணர்வுப்பூர்வமான பாடல்களாலும் இசை ரசிகர்களின் உள்ளங்களில் என்றும் வாழும் அவரது மறைவு இசையுலகிற்குப் பேரிழப்பாகும். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், கலையுலகினர் மற்றும் இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார். 

Source link