தைரியமான நீதிபதிகளை மதிக்கும் அரசு; பணிவாக நடந்துகொண்ட சந்திரசூட்: கொலீஜியம் அமைப்பின் குறைகளை பட்டியலிட்ட முன்னாள் நீதிபதி

எழுதியவர்:ரிது சரின்

இந்திய நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் அமைப்பு, அரசாங்கத்தின் ஆலோசனைப்படி நடந்துகொள்வதாகவும், இந்த அமைப்பில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளர். 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

இந்தியத் தலைமை நீதிபதியாக இருந்தபோது, நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் “அரசாங்கத்திடம் மிகவும் பணிவாக” நடந்துகொண்டார். ஒரு சந்தர்ப்பத்தில், கொலீஜியம் (உயர்நீதிமன்றக் குழு) கூடுவதற்கு முன்பே அரசாங்கத்தின் ஒப்புதலை பெற்றார், மற்றொரு முறை, சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி வேட்பாளரின் சாதி குறித்து அரசாங்கம் கேட்ட “விசித்திரமான” கேள்வியையும் அவர் வெளிப்படுத்தினார்.

இறுதியில் மேலும் பல கோரிக்கைகளை முன்வைக்கும் “அரசியல் வர்க்கத்தை” எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான இந்த விவகாரம், அன்றைய தலைமை நீதிபதியுடன் அவருக்கு இருந்த உறவில் ஒரு “மனக்கசப்பாக” இருந்தது என்று நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ‘வித்தவுட் ஃபியர் ஆஃப் ஃபேவர்’ (Without Fear of Favour) என்ற தனது சுயசரிதை நூலில் வெளிப்படுத்தியுள்ளார். இந்த புத்தகம் ஜூகர்நாட் (Juggernaut) பதிப்பகம் மூலம் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. 

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் இந்த புத்தகம் வெளியீட்டுக்கு முந்தைய கையெழுத்துப் பிரதியை ஆய்வு செய்தது. அப்போது, தலைமை நீதிபதிக்கு (CJI) அடுத்தபடியாக மிகவும் மூத்த நீதிபதியான “ஜே1 (J1)” ஆக 14 மாதங்கள் பணியாற்றி, டிசம்பர் 2023-ல் ஓய்வு பெற்ற நீதிபதி கவுல், பலமுறை இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார் என்றும், ஒருமுறை ” கொலீஜியம் கூட்ட அரங்கை விட்டே வெளியேறினார்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக அமைந்துள்ள அரசாங்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் பங்கு தீவிர ஆய்வுக்குட்பட்டுள்ள இந்தச் சூழலில், நீதிபதி கவுலின் இந்த விமர்சனம் ஒரு முக்கியமான தகுதியுடன் வருகிறது. “துணிச்சலும் நிமிர்ந்த முதுகெலும்பும் கொண்ட நீதிபதிகளுக்கு அரசாங்கம் அதிக மரியாதை அளிக்கிறது என்பதை நான் கண்டுகொண்டேன்” என்றும், “தங்களை மதிக்கும் நீதிபதிகளை அரசாங்கமும் மதிக்கும்” என்றும் கவுல் எழுதுகிறார். அத்துடன், பல வழக்குகளில் நீதிமன்றம் அழுத்தம் கொடுத்தபோது, அதன் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது என்றும் அவர் பட்டியலிடுகிறார்.

அதே நேரத்தில், நீதிமன்றத்திற்கு என்று சில எல்லைக்கோடுகள் உள்ளன என்பதையும் தெளிவுபடுத்தியுள்ள அவர், “நீதிமன்றம் என்பது ஒரு கண்காணிப்பு மற்றும் சமநிலை அமைப்பாகும். அது நிர்வாகம் விரும்பாத ஒரு முடிவையும் எடுக்கக்கூடும், ஆனால் அது எதிர்க்கட்சியின் பின்வரிசைப் பாதுகாப்பாக செயல்பட முடியாது, ரஃபேல் போர் விமான வழக்கில், ஒப்பந்தத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தபோது “அன்றைய அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் நீதிமன்றம் தங்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது நீதிமன்றத்தின் பணி அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில், கடந்த தசாப்தத்தில் நீதித்துறைக்கும் நிர்வாகத்திற்கும் இடையே நடந்த மிகக் கடுமையான சர்ச்சையான, நீதிபதிகள் நியமனத்தில் அரசாங்கத்திற்கு ரத்து அதிகாரம் (veto) அளித்த ‘தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை’ (NJAC) 2015-ல் ரத்து செய்த நடவடிக்கை குறித்து கவுல் பல கருத்துக்களை கூறியுள்ளார். இதில் என்ஜேஏசி (NJAC) முறையை நீதித்துறை உடனடியாக நிராகரித்திருக்கக் கூடாது; மாறாக அது செயல்பட ஒரு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து என்று கூறியுள்ளார். 

அரசாங்கத்தின் கருத்து கேட்கப்பட்டது என்பதில் அவருக்குப் புகாரில்லை, ஆனால் அந்த கருத்து எவ்வாறு கேட்கப்பட்டது என்பதில் தான் அவருக்கு ஆட்சேபனை. “ஆலோசனை செய்வதற்கும், நான் ‘முன்-ஒப்புதல்’ (pre-approval) எனக் கருதியதற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. கொலீஜியம் முறைப்படி விவாதிப்பதற்கு முன்பே அரசாங்கத்தின் ஒப்புதலைக் கோருவது தவறான சமிக்ஞையை அனுப்புகிறது. நீங்கள் கதவைச் சிறிது திறந்து வைத்தாலும், எந்தவொரு அரசியல் வர்க்கமும் தங்களை நிலைநிறுத்தவே முயலும். இது எந்த வகையிலும் ஒரு கட்சி சார்ந்த விஷயம் அல்ல, மாறாக அதிகாரத்தின் தவிர்க்க முடியாத இயங்கியல் (dynamics of power) பற்றிய கேள்வி மட்டுமே,” என்று அவர் எழுதியுள்ளார்.

இந்த பின்னணியில், நீதிபதி சந்திரசூட் குறித்த தனது தயக்கங்களை கூறியுள்ள நீதிபதி கவுல் ஜூன் 2022-ல் கொலீஜியத்தின் உறுப்பினரானதும், இருவரும் சேர்ந்து அரசாங்கத்தை எதிர்கொள்ளலாம் என்று தான் யோசனை தெரிவித்தேன். “நான் தலைமை நீதிபதி இல்லை என்பதால், இருவரில் சற்று கடுமையானவராகச் செயல்பட முடியும். விருப்பப்பட்டால் இதை ஒரு நல்வழிகாட்டி-கடுமையானவர் (good-cop bad-cop) ஏற்பாடாகக் எடுத்துக் கொள்ளலாம்.

அரசாங்கம் இதற்கு “எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; அவர்கள் என்னை மதிப்பிட்டிருந்தனர், நான் எளிதில் வளைந்து கொடுப்பவனோ அல்லது புறக்கணிக்கப்பட வேண்டியவனோ அல்ல என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் “தனஞ்சய், சில விதிவிலக்குகளைத் தவிர, அந்த உறவைத் தனியாகவே கையாள விரும்பினார் என்று கூறியுள்ளார். 

ஆறு காலியிடங்களை நிரப்புவதற்கான முதல் முக்கிய கொலீஜியம் நடவடிக்கை, இவர்களுக்கு இடையேயான உரசலை காட்டியது. ஆறு நியமனத்தில், உறுப்பினர்கள் முன்னதாகவே ஐந்து பெயர்களுக்கு உடன்பட்டிருந்தனர். “அன்று, கூட்டத்திற்குச் செல்லும்போது, தனன் (தலைமை நீதிபதி சந்திரசூட்) ஆறாவது பெயரைப் பரிந்துரைத்தார். மற்ற நீதிபதிகள் அதை எதிர்த்தனர். “அந்தப் பெயர் அரசாங்கத்தின் வற்புறுத்தலின் பேரில் பரிந்துரைக்கப்பட்டதோ என்று நான் சந்தேகித்தேன்.” பின்னர் தலைமை நீதிபதி அவரைத் தனியாக அழைத்துச் சென்று, “அரசாங்கத்தின் கருத்தைச் சரிபார்க்க தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாமா என்று உரக்க யோசித்தார்.

அப்போது என் சந்தேகங்கள் உறுதிசெய்யப்பட்டன, அவருக்குப் புத்திமதி கூறினேன்: ஒரு கொலீஜியம் கூட்டத்தின் நடுவில் அவர் அப்படிச் செய்ய முடியாது.” அந்த ஐந்து பெயர்களும் ஒப்புக்கொள்ளப்பட்டன. ஆறாவது பெயர் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. “என் மதிப்பீடுகளில் நான் எப்போதும் வெளிப்படையாக இருந்திருக்கிறேன். நாட்டின் உயரிய நீதிமன்றத்திற்கு உயர்வு பெறுவது என்பது ஒரு உரிமையோ அல்லது ‘சரியான இடத்தில் பேசி’ பெறக்கூடிய பதவியோ அல்ல,” என்று அவர் எழுதியுள்ளார். 

மேலும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி வேட்பாளரின் தேர்வு எவ்வாறு அதிகாரப்பூர்வ கேள்வியுடன் தொடங்கியது என்பதையும் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய பிரச்சினைகளில்தான் தலைமை நீதிபதிக்கும் தனக்கும் இடையிலான “பதற்றம் உச்சத்தை எட்டியது” என்பதையும் வெளிப்படுத்துகிறார்.

அவரைப் பொறுத்தவரை, ஏற்கனவே பிற மதச் சிறுபான்மையினரைச் சேர்ந்த நீதிபதிகள் பதவியில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, சிறுபான்மை மதங்களின் பிரதிநிதித்துவம் மேலும் தேவையா என்று அரசாங்கம் கேட்டது. “இந்த தர்க்கத்தால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன்,” என்று கவுல் குறிப்பிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அந்த சிறுபான்மை வேட்பாளரின் குடும்பத்தின் சாதி பற்றிய கேள்வி வந்தது, அதை அவர் “மிகவும் விசித்திரமானது” எனக் கருதினார்: அவரது குடும்பம் பல தலைமுறைகளாக அந்த மதத்தில் இருந்து வருகிறது என்று “அதை நாம் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்?

எப்படியாயினும் அது பொருத்தமானதாகத் தோன்றவில்லை. அதைத் தொடர்ந்து வந்த கேள்வி அதிர்ச்சியளிப்பதாக இருந்தது: அரசாங்கத்தின் கருத்தாக தனன் என்னிடம் ஒன்றைச் பகிர்ந்துகொண்டார், அதை நான் இப்போது தவிர்க்க (redact) வேண்டும், ஆனால் அது என்னை ஆத்திரமூட்டியது. ‘நாம் இப்படித்தான் நீதிபதிகளை நியமிக்கப் போகிறோம் என்றால், நீங்களே ஆலோசித்து நியமித்துக் கொள்ளலாம். கொலீஜியம் உருவாக்கப்படுவதற்கு முன்பு தலைமை நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்து வந்தார்கள். நீங்கள் அந்த வழியிலேயே செய்யலாம். இதுபோன்ற ஒரு முடிவில் என்னால் பங்கேற்க முடியாது’ என்று கூறினேன் 

அதன்பிறகு நான் கோப்பை மூடிவிட்டு அறையை விட்டு வெளியேறினேன். கூட்டம் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது. சிறிது காலத்திற்கு எந்தக் கூட்டமும் நடைபெறவில்லை, அதற்குள் அரசாங்கம் இறங்கிவந்து அந்த வேட்பாளர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்,” என்று அவர் எழுதுகிறார்.

நியமனச் செயல்பாட்டின் உண்மைநிலை இதுதான். கொலீஜியம் அரசியல் அழுத்தங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று கற்பனை செய்வது கட்டுக்கதை. அரசாங்கங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றன. நீங்கள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தால், அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த அழுத்தங்களைக் கையாளும் அதே வேளையில், அமைப்பின் நேர்மையைப் (institutional integrity) கடைபிடிப்பதே சவாலாகும். உண்மையில், இதுபோன்ற விஷயங்களில் துணிச்சல் கொண்ட நீதிபதிகளுக்கு அரசாங்கம் அதிக மதிப்பளிக்கிறது என்பதையும், சமநிலையின் அவசியத்தையும் நான் கண்டுகொண்டேன்,” என்று கவுல் எழுதுகிறார்.

இந்தக் கருத்துகள் குறித்துக் கேட்டபோது, நீதிபதி சந்திரசூட் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம்’ கூறுகையில், “சஞ்சய் கவுல் எழுதியுள்ளது குறித்து நான் கருத்து தெரிவிப்பது மிகவும் கடினம், ஏனென்றால் நான் அந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை. எனவே அவர் என்ன எழுதியுள்ளார், எந்தக் சூழலில் எழுதியுள்ளார் என்பதைப் படிக்கும் வரை என்னால் விரிவான பதிலை அளிக்க முடியாது.

இருப்பினும், தலைமை நீதிபதியாக நான் சிறந்த கொலீஜியம் கூட்டங்களை நடத்தியுள்ளேன் என்பதையும், சஞ்சய் கவுலுடனும் கொலீஜியம் உறுப்பினர்களாக மிகவும் மரியாதைக்குரிய உறவே இருந்தது என்பதையும் கூற விரும்புகிறேன். சிறந்த உரையாடல்கள், காரணகாரியங்களுடன் கூடிய விவாதங்கள் நடந்துள்ளன, மேலும் நாங்கள் கொலீஜியத்தில் சுமுகமான கூட்டங்களை நடத்தியுள்ளோம்.

கூட்டத்திலிருந்து வெளியேறியது (walkout) மற்றும் கருத்து வேறுபாடுகள் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். சஞ்சய் கவுல் ஒரு கொலீஜியம் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஒரு சம்பவத்தைக் கூட என்னால் நினைவுகூர முடியவில்லை. ஒவ்வொரு கொலீஜியம் கூட்டத்திற்குப் பிறகும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதை நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன், மேலும் தீர்மானங்களில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு எதிர்ப்பையும் நான் நினைவில் கொள்ளவில்லை. 

தலைமை நீதிபதி அரசாங்கத்துடன் ஆலோசனையில் இருந்தார் என்பதை மறைமுகமாக நீதிபதி கவுல் எழுதியுள்ளார் என்று நீங்கள் சொன்னால், அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பதை நான் மீண்டும் துல்லியமாகப் படிக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்திற்கு ஒரு பங்கு இருக்கிறது, அது தலைமை நீதிபதியுடன் விவாதத்தில் இருக்கிறது, அல்லவா? எல்லாவற்றிற்கும் மேலாக, நீதிபதிகளின் நியமன ஆணைக்கான சான்றிதழில் கையொப்பமிடுபவர் குடியரசுத் தலைவர் அல்லவா?” என்று அவர் கூறினார்.

புத்தகத்தில், நீதித்துறை சார்ந்த மற்றொரு சம்பவத்தையும் கவுல் குறிப்பிடுகிறார். உச்சநீதிமன்றத்தின் சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட (PMLA) தீர்ப்பின் சில அம்சங்களை “மறுபரிசீலனை செய்யத் தகுதியுள்ளதா” என்ற கேள்வியை அவர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பட்டியலிட்டிருந்தது. “இந்த எளிய பட்டியலிடலை அரசாங்கம் ஒரு சாதகமற்ற நகர்வாகப் பார்த்தது” பின்னர், “என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், அது முற்றிலும் வேறு ஒரு அமர்வின் முன் கொண்டுவரப்பட்டது என்று அவர் எழுதுகிறார். 

தனது ஆட்சேபனை கொள்கை ரீதியானது என்று கூறியுள்ள நீதிபதி கவுல், “ஒரு அமர்வு எவ்வாறு தீர்ப்பளிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக வழக்குகள் ஒரு அமர்விலிருந்து மற்றொரு அமர்வுக்கு மாற்றப்படக் கூடாது.” அந்த அமர்வு மாற்றியமைக்கப்பட்டது, ஆனால் நான் ஓய்வு பெறுவதற்குள் விசாரணை முடிவடையவில்லை என்று கூறியுள்ளார். 

மூத்த வழக்கறிஞருக்கான தகுதி வழங்குவது குறித்து எழுதியுள்ள கவுல் “செயல்முறைகளில் கடுமையான இருப்பேன் என்பதால், நான் ஓய்வு பெறும் வரை கெடுவை நீட்டித்துக் கொண்டே இருக்குமாறு சிலர் தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு அறிவுறுத்தியதாக “தான் பின்னர் அறிந்துகொண்டேன். அது உண்மையோ இல்லையோ, நான் ஓய்வு பெற்ற உடனேயே, ஜனவரி 2024-இல் அந்தத் தகுதிகள் வழங்கப்பட்டன என்று குறியுள்ளார்.

கவுலின் பதிவு என்பது ஒரு தனியார் நிறுவன உறவின் ஒரு பக்கமாகும். தான் பணியாற்றிய அமைப்பு முறையையும் அவர் கடுமையாக விமர்சிக்கிறார். கொலீஜியத்தை “மிகவும் குறைபாடுகள் உடையது” என்று கூறியுள்ள அவர், “வெளிப்படைத்தன்மையின்மை, அதிகாரக் குவிப்பு மற்றும் முறைசாரா வழிகள் மூலம் அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு ஆளாகும் நிலை” ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுகிறார்.

கொலீஜியம் அரசியல் அழுத்தங்களிலிருந்து விலகி இருப்பதாகக் கற்பனை செய்வது கட்டுக்கதை, மேலும் அந்த அழுத்தத்தின் பெரும்பகுதி “2015-ல் என்ஜேஏசி (NJAC) நிராகரிக்கப்பட்டதை அரசியல் பிரிவு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை” என்ற உண்மையிலிருந்து உருவாகிறது என்று கூறியுள்ளார். அவரது பதிவின்படி, அரசாங்கத்துடன் உறுதியாகப் பேசும்போது அது நியாயமற்றதாக இருக்கவில்லை. அரசாங்கம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட பல நிகழ்வுகளை இந்தச் சுயசரிதை பதிவு செய்கிறது:

பெரிய உயர் நீதிமன்றங்களில் ஒன்றிற்கு ஒரு குறிப்பிட்ட நீதிபதி தலைமை தாங்குவதில் மத்திய அரசு “உறுதியாக” இருந்தது. சந்திரசூட் கவுலிடம், “அவர்களை உங்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளச் சொல்லுங்கள்” என்றார். “நான் அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட உறுப்பினரிடம் பேசினேன்… அரசாங்கம் ஒப்புக்கொண்டது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவருக்கான அனுமதி தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, “சட்டம் அமைச்சரிடம் நேரடியாகப் பேசினேன். அரசாங்கத்தைப் பாராட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன், இரண்டு பெயர்களும் அறிவிக்கப்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மைச் சமூக வேட்பாளரைக் குறிப்பிட்டு, கவுல் வெளியேறிய பிறகு “சிறிது நேரத்திற்கு கொலீஜியம் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை, அதற்குள் அரசாங்கம் இறங்கிவந்து வேட்பாளர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்” என்று கவுல் எழுதுகிறார். முதல் ஐந்து உச்சநீதிமன்ற பெயர்களைப் பொறுத்தவரை, இவை “தேவையின்றி நிலுவையில் வைக்கப்பட்டதாக” அவர் உணர்ந்தார், ஆனால் “முடிவில் அரசாங்கம் மூப்பு வரிசையை (seniority) மதித்தது.

உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதில், குறிப்பாகக் கொலீஜியம்-மத்திய அரசு இடையிலான சமநிலையை கடைபிடிப்பதில், உச்ச நீதிமன்றத்தின் பங்கு குறித்து வளர்ந்து வரும் விவாதத்திற்கு மத்தியில் கவுலின் சுயசரிதை வந்துள்ளது. 2022-23 கொலீஜியம்-மத்திய அரசு மோதலிலிருந்து இந்த விவாதம் தொடங்குகிறது; அப்போதைய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் அப்போதைய துணை குடியரசுத்தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோர் கொலீஜியம் மற்றும் என்ஜேஏசி தீர்ப்பை பகிரங்கமாகக் கேள்வி எழுப்பினர், மேலும் 2024-ல் தனது இல்லத்தில் கணபதி பூஜையின் போது பிரதமரை உபசரித்ததற்காக சந்திரசூட் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

நீதிமன்றம் இரு பக்கமும் தனது நிலையை உறுதியாகப் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதே கவுலின் நிலைப்பாடு: “நாம் ஒருபோதும் பிரபலமடைவதற்கான (populist) நீதிமன்றமாக மாறக்கூடாது, மாறவும் முடியாது என்று எழுதியுள்ளார். 

1958-ல் ஒரு காஷ்மீரி குடும்பத்தில் பிறந்த கவுல், செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தின் கேம்பஸ் லா சென்டரில் பயின்றார். 2001-ல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சேருவதற்கு முன்பு மூத்த வழக்கறிஞராக இருந்த அவர், பின்னர் பஞ்சாப், ஹரியானா மற்றும் மதராஸ் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார். பிப்ரவரி 2017-ல் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் உயர்த்தப்பட்டார்.

நீதிபதியாக 22 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு டிசம்பர் 2023-ல் ஓய்வு பெற்றார். உயர் நீதிமன்றங்களில், எம்.எஃப். உசேன் மற்றும் பெருமாள் முருகன் வழக்குகளில் கலைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் தீர்ப்புகளை அவர் எழுதினார். உச்சநீதிமன்றத்தில், மறக்கப்படுவதற்கான உரிமையை (right to be forgotten) அங்கீகரித்த 2017 புட்டசுவாமி தனிநபர் உரிமைத் தீர்ப்பில் ஒரு உடன்பாட்டு அபிப்பிராயத்தை எழுதினார். 

ரஃபேல் மனுக்களைத் தள்ளுபடி செய்த அமர்வில் அவர் இருந்தார். ஒரே பாலின திருமண வழக்கில் (2023), சிவில் தொழிற்சங்கங்கள் விவகாரத்தில் தலைமை நீதிபதியுடன் கை கோர்த்தார். சட்டப்பிரிவு 370 தீர்ப்பில் (2023), ஜம்மு காஷ்மீருக்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தைக் கோரும் ஒரு தனி கருத்தை எழுதினார். தனது கடைசி மாதங்களில், “வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்ற எண்ணம் வளர்ந்ததாகவும்”, தான் மேம்படுத்த உழைத்த உச்சநீதிமன்ற அமைப்பு முறை “மிகவும் குறைபாடுடையதாகவே இருந்தது” என்றும் அவர் எழுதுகிறார்.

உச்சநீதிமன்றத்தில் கழித்த ஆண்டுகளில் தனக்கிருந்த “தனிப்பட்ட வருத்தங்கள்” என்று அவர் விவரித்தவற்றையும் அவர் சுருக்கமாகக் கூறுகிறார்: “சுருக்கமாகச் சொன்னால், ஒரு வழக்கு என் கைகளிலிருந்து பறிக்கப்பட்டது; நீதிபதிகள் நியமன விவகாரம் கடைசி நிமிடத்தில் திரும்பப் பெறப்பட்டது; தகுதிகள் தள்ளி வைக்கப்பட்டன மற்றும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் நியமனம் நான் சென்ற மறுநாள் வரை நிறுத்தி வைக்கப்பட்டது.”

Source link