ராய்ப்பூர்: இரண்டாவது ‘டி-20’ போட்டியில் ஷபாலி வர்மா அரைசதம் விளாச இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2–0 என கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் 2வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் ஜோஸ்பின் நிகோமோ ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
திணறல் துவக்கம்: ஜிம்பாப்வே அணிக்கு கெலிஸ், பிசா ஜோடி மந்தமான துவக்கம் தந்தது. நந்தினி சர்மா ‘வேகத்தில்’ கெலிஸ் (0) போல்டானார். பிசா (7), ஷார்ன் மேயர்ஸ் (9) சோபிக்கவில்லை. ஸ்ரீசரணி பந்தில் முகேரி-திரிபானோ, வரிசையாக 2 பவுண்டரி அடித்தார்.
நான்காவது விக்கெட்டுக்கு 45 ரன் சேர்த்த போது நிக்கி பிரசாத் பந்தில் முகேரி-திரிபானோ (34) ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசத்திய நிக்கி ‘சுழலில்’ நியாஷா குவான்சுரா (0) அவுட்டானார். முபாசிக்வா (9), மிஷெல் மாவுங்கா (4) ஏமாற்றினர். கேப்டன் நிகோமோ (28) ‘ரன்-அவுட்’ ஆனார்.
ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 103/8 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் நிக்கி பிரசாத் 2 விக்கெட் வீழ்த்தினார்.
சூப்பர் ஜோடி: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. நியாஷா வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் ஷபாலி. மறுமுனையில் அசத்திய ஸ்மிருதி, நியாஷா வீசிய 5வது ஓவரில் வரிசையாக 4 பவுண்டரி விரட்டினார்.
மாவுங்கா வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ஷபாலி, பிசா பந்தை சிக்சருக்கு அனுப்பி, சர்வதேச ‘டி-20’ அரங்கில் தனது 22வது அரைசதம் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்த போது ஷபாலி (55 ரன், 25 பந்து, 4X6, 6X4) அவுட்டானார். ஒலிண்டர் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஸ்மிருதி வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி 8.5 ஓவரில் 104/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மிருதி (47 ரன், 25 பந்து, 2X6, 6X4), அனுஷ்கா சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
