லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரு ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தொடரில் சமநிலை பெற்றுள்ளன. இந்த நிலையில், இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான இந்தப் போட்டியில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நட்சத்திர பவுலர் பும்ரா காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடவில்லை. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகும். அவருக்கு பதிலாக பிரின்ஸ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே ஆகியோருக்கு பதிலாக கேஎல் ராகுல் மற்றும் அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா ஓய்வு குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இன்றைய அவரது ஆட்டத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
