புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தி.மு.க. செயற்குழு கூட்டத்தில், த.வெ.க.வின் வெற்றி குறித்து முன்னாள் அமைச்சர் ரகுபதி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக சாதனை படைத்தது. ஆனால் ஆட்சி அமைக்க 119 இடங்கள் தேவை என்பதால், தி.மு.க. கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து த.வெ.க ஆட்சி அமைத்துள்ளது. முன்னணி நடிகராக இருந்த விஜய் இதன் மூலம் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
தேர்தலுக்கு முன்பு வெளியான பல்வேறு கருத்துக்கணிப்புகளில் மீண்டும் தி.மு.க. தான் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறியது. குறிப்பாக சென்னையில் உள்ள சேப்பாக்கம் மற்றும் துறைமுகம் ஆகிய இரு தொகுதிகளை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் த.வெ.க வெற்றி பெற்றிருந்தது. அதே சமயம் முதல்வர் வேட்பாளராக மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் முதல் முறையாக அந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனால் தற்போது உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கிறார்.
இந்நிலையில், தேர்தல் முடிவு வெளியான நாளில் இருந்து தி.மு.க. தலைவர்கள் பலரும் த.வெ.க.வுக்கு எதிராக கடுமையான விமர்சனஙகளை முன்வைத்து வருகின்றனர். அதே சமயம் கட்சிளை மறுசீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் புதுக்கோட்டையில், தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பேசிய முன்னாள் எம்.எல்.ஏ உதயம் சண்முகம், தி.மு.க. வெற்றி பெற வேண்டிய அறந்தாங்கி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
தவெகவை வெற்றி பெற வைத்தது உன்னுடைய மகன் தான்.. புதுக்கோட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கூச்சல் குழப்பம்.. முன்னாள் அமைச்சர் ரகுபதி, முன்னாள் எம்.எல்.ஏ. இடையே வாக்குவாதம்..#Pudukkottai | #DMK | #Regupathy | #PolimerNewspic.twitter.com/8TDYdyat2c
— Polimer News (@polimernews) September 5, 2026
இதை கேட்டு ஆவேசமாக மேடை ஏறிய முன்னாள் அமைச்சர் ரகுபதி, மைக்கை பிடுங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அறந்தாங்கியில் த.வெ.க வேட்பாளரை வெற்றி பெற வைத்தது உன் மகன் தான் என்று உதயம் சண்முகத்திற்கு பதில் அளித்துள்ளார். மேலும், த.வெ.க வேட்பாளர் முகமது பர்வேஸ்க்கு தெருத்தெருவாக ஓட்டு கேட்டது உன் மகன் தான், உங்களால் தான் அறந்தாங்கியில் த.வெ.க வெற்றி பெற்றது என்று சொல்ல, கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏ இருவருக்கும் இடையே நடந்த இந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
