நக்கீரன் இணைய செய்தி எதிரொலி; தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு குவியும் வாழ்த்துகள்

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சி. கொத்தங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஈஸ்வரியின் தொடர் முயற்சியால் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், அவரது அர்ப்பணிப்பு மிக்க பணியை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் வசிக்கும் இப்பள்ளியில் கடந்த ஆண்டு வெறும் 7 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்றதால் பள்ளி மூடும் நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற ஈஸ்வரி, வீடு வீடாகச் சென்று அரசு பள்ளிகளின் சிறப்புகள், கல்வித் தரம் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதன் பலனாக தற்போது பள்ளியில் 18 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், ஒரு ஆசிரியர் பள்ளியாக இருந்தது தற்போது இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து முழு விபரத்துடன் நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியாகி  இருந்தது.

இந்த செய்தி சமூக வலைததளங்களில் வைரலாகியது. இதனை வாட்சப் மூலம் பார்த்த பள்ளியின் முன்னாள் மாணவியும் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைப் பேராசிரியருமான க.மகேஸ்வரி மற்றும் அரசு ஊழியரும் அவரது கனவருமான முன்னாள் பள்ளி மாணவர் தங்க. கஜேந்திரன் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர் ஈஸ்வரியை சந்தித்து அவரது அர்ப்பணிப்பு பணியை பாராட்டி  சால்வை அணிவித்து வாழ்த்தினர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் பள்ளி வளாகத்தில் கான்கிரீட் தரை, சுற்றுச்சுவர், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ், டை மற்றும் புதிய சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தனர்.

இதுபோன்ற முன்னாள் மாணவர்கள் கல்வி பயின்ற பள்ளிக்கு செய்யும் உதவியால் பள்ளியின் கல்வித் தரமும், மாணவர் சேர்க்கையும் மேலும் உயரும் என பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Source link