“நடிகரை வைத்து பா.ஜ.க குழப்ப முயற்சிக்கிறது, இது பிளான் சி…” – மாணிக்கம் தாகூர் பரபரப்பு!

முதல்வர் விஜய்யின் அரசியல் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அரசியலில் களம் இறங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தனுஷின் செயல்பாடுகளும் அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும் அமைந்து வருகிறது. இந்த சூழலில், இன்று (25-10-26) சென்னை செம்மஞ்சேரியில் தனுஷ் தலைமையில் தனுஷ் நற்பணி இயக்க மகளிரணி சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து ஏராளமான தனுஷ் மகளிரணி நிர்வாகிகள் வந்துள்ளனர்.

இந்த நிலையில், மதுரையில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் தனுஷின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பா.ஜ.கவை பொறுத்தவரை பல வகையில் தமிழ்நாட்டில் குட்டையை குழப்புவதற்கான முயற்சி மேற்கொண்டே இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியை பிடித்து அதிமுகவை தன்னுடைய கையில் வைக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதன் பிறகு தினகரன் மாதிரி ஆட்களை கையில் வைத்துக் கொண்டார்கள். இதை எல்லாவற்றையும் மக்கள் நிராகரித்துவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமியையும் தினகரனையும் மக்கள் நிராகரித்துவிட்டார்கள்.

இப்போது, ஆர்.எஸ்.எஸ் பி மற்றும் சி பிளான் ஆப்ரேஷன் போடுகிறது. பி பிளான் என்னவென்றால் அண்ணாமலை என்ற புதிய முகம். அந்த முகத்துக்கு புது முகமூடி கொடுத்து கட்சியை விட்டு வெளியே சென்று ஒரு என்.ஜி.ஓ மாதிரி இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் பேசுகிற பேச்சு எல்லாம் பா.ஜ.க பேச்சு, பா.ஜ.கவுக்கு ஆதரவான பேச்சு, குழப்பமான பேச்சு. சி பிளான் என்னவென்றால் ஒரு நடிகரை ரெடி செய்கிறார்கள்.  டெல்லியில் இருந்து ஒரு நடிகர், இன்று ரசிகர் கூட்டம் போடுகிறார். இது எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் அதிமுக, பா.ஜ.கவினுடைய பிளான் 1, அண்ணாமலையை தனியாக கட்சி ஆரம்பிக்கவிட்டது பிளான் பி, புதிய நடிகரை கட்சி ஆரம்பிக்க வைப்பது பிளான் சி. இது எல்லாமும் ஆர்.எஸ்.எஸ்ஸுனுடைய திட்டம். டெல்லியில் அமித் ஷாவிடம் இருந்து உருவாகின்ற இந்த ஆபரேஷன் தான் ஆபரேஷன் ‘டி’.  

தமிழ்நாட்டில் குழப்பம் விளைவிப்பதற்காக அமித்ஷாவும் பா.ஜ.ககாரர்களும் செய்கின்ற வேலை தான் இது. அதிமுக என்பது சினிமா சார்ந்த கட்சி. அதனுடைய வாக்குகளை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க பல காலமாக ஆசைபட்டது. அதற்கான பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். ரஜினிகாந்தை கட்சி ஆரம்பிக்க வைத்தார்கள், ஆனால் அவர் கடைசி நேரத்தில் கட்சி ஆரம்பிக்காமல் போய்விட்டார். அதிமுகவினுடைய இடத்தை பிடிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்ஸும் பா.ஜ.கவும் பல வருடங்களாக முயற்சிக்கிறார்கள். தவெக என்ற கட்சி விஜய் என்பவருடைய தனிப்பட்ட பிரபலத்தால் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சி. அந்த கட்சியுடன் எங்களுடைய கூட்டணி இருக்கிறது. இந்த கூட்டணி பலமாக இருக்கிறது. இந்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி நீண்ட நாள் ஆட்சி செய்யும்” என்று கூறினார்.