நந்தனத்தில் விஜய்; பசும்பொன்னில் ஸ்டாலின்: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தலைவர்கள் மரியாதை

விடுதலைப் போராட்ட வீரரும், ஆன்மீகவாதியுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாளும், 64-வது குருபூஜை விழாவும் இன்று (அக்டோபர் 30) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள அவரது உருவச்சிலைகளுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்துத் தங்கள் மரியாதையைச் செலுத்தி வருகின்றனர்.

ஆண்டுதோறும் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் குருபூஜை விழா நடத்தப்படுவது வழக்கம். இதில் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் திரளாகக் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் பசும்பொன்னுக்கு நேரடியாகச் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், அவர் பசும்பொன் நிகழ்வில் பங்கேற்கமாட்டார் என்பதைச் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, தேவர் ஜெயந்தியை முன்னிட்டுச் சென்னையில் உள்ள நந்தனம் சிக்னல் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் விஜய் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

மற்றொருபுறம், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக நேற்றைய தினமே சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார். இன்று காலை 8 மணியளவில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கும், தொடர்ந்து தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்களின் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர், காரில் பசும்பொன் சென்றடைந்த அவர், அங்குள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இதேபோல, இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று காலை 8.50 மணிக்கு விமானம் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து ஹெலிகாக்ப்டர் வாயிலாகப் பசும்பொன் சென்றடைந்து தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்று மரியாதை செலுத்தினார். இவர் மாலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, டெல்லி புறப்படத் திட்டமிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமாகா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட பல தலைவர்களும் பசும்பொன்னிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தவிர, தமிழக ஆளுநர் அர்லேகர், அரசு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மரியாதை செலுத்தும் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

முக்கியத் தலைவர்களின் வருகையை முன்னிட்டு பசும்பொன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 டி.ஐ.ஜி-க்கள் மற்றும் 40 எஸ்.பி-க்கள் தலைமையில் சுமார் 18,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் தலைவர்கள் மரியாதை செலுத்துவதற்குத் தனித்தனி நேரங்கள் ஒதுக்கப்பட்டன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், அவற்றுக்கு இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளிலும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டது. அதேபோன்று முதலமைச்சர் விஜய்யின் வருகையை முன்னிட்டுச் சென்னை நந்தனம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சிறப்புப் போக்குவரத்து மாற்றங்களும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டன.

Source link