நம்மூர் பாணியை பின்பற்றுகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்:தேர்தலில் வென்றால் ஆளுக்கு ரூ.5,00,000 அறிவிப்பு

வாஷிங்டன்:அமெரிக்காவிலும், நம்மூர் பாணியை பின்பற்றி, ‘வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் குடியரசு கட்சி வென்றால், ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா, 5,000 டாலர் அதாவது, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்’ என்று, அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபராக குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்ப், கடந்தாண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாக பதவியேற்றார். அப்போது முதல் குடியேற்றக் கொள்கை, விசா நடைமுறைகள், பல நாடுகள் மீது அதீத இறக்குமதி வரி விதிப்பது என அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளால் அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதுடன், பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஈரானுடன் ஏற்பட்ட போர் மற்றும் அதனால் நாட்டின் எரிபொருள் செலவுகள் அதிகரித்தது, அந்நாட்டு மக்களிடையே அதிருப்தியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் வரும் நவ., 3ம் தேதி, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைக்கான பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ளது .

அதிபரின் நான்கு ஆட்சி காலத்தின் இடைபட்ட காலத்தில் நடக்கும் தேர்தல் என்பதால், இதை இடைக்கால தேர்தல் என்றும் கூறுவர். இந்தத் தேர்தல், அதிபர் மீது மக்களின் நம்பிக்கையை பறை சாற்றுவதாக அமையும்.

தற்போது அதிபர் டிரம்ப் மீதான அதிருப்தி மிக அதிகமாக உள்ளது. அதனால், வரும் பார்லிமென்ட் தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு பெரிய அதிர்ச்சியான முடிவுகள் வெளிவரும் என, கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

வழக்கமாக இதுபோன்ற இடைக்கால தேர்தலின்போது, அதிபர்கள் பிரசாரம் செய்வதில்லை. ஆனால், முதல் முறையாக தற்போது பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, டல்லாசில் நேற்று நடந்த குடியரசுக் கட்சியின் மாநாட்டில் பேசிய டிரம்ப், தேர்தலில் தங்கள் கட்சி வென்றால், ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையும் அவர் விதித்து இருக்கிறார். டிரம்ப் வழங்கும் இந்த பணத்தை வெளிநாடுகளுக்குச் சென்று செலவழிக்கக் கூடாது என்றும் அமெரிக்காவிற்குள் மட்டுமே செலவழிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பார்லிமென்டின் இரு சபைகளையும் குடியரசுக் கட்சி கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவருடைய இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மக்களுக்கும் கட்சிக்கும் இடையே ஒரு பேரம் பேசுவது போல இந்த அறிவிப்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. தேர்தல் நேரத்தில் மக்களைக் கவர டிரம்ப் வெளிப்படையாக லஞ்சம் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு முன்பும், இதுபோன்று மக்களுக்கு பணம் கொடுப்பதாக டிரம்ப் கூறியிருந்தார். வெளிநாடுகளில் இருந்து வரும் வரி வருவாயில், 2,000 டாலர்களை, அதாவது, 2 லட்சம் ரூபாயை மக்களுக்கு வழங்குவதாக, கடந்தாண்டு அவர் கூறியிருந்தார். ஆனால், இது வெறும் அறிவிப்போடு நின்றுவிட்டது.

ரூ. 129 லட்சம் கோடி தேவை!
அமெரிக்காவின் மக்கள் தொகை, 34.9 கோடியாக உள்ளது. அதில் ஓட்டளிக்க தகுதி பெற்றோர், 27 கோடி பேர். டிரம்ப்பின் அறிவிப்புபடி, 27 கோடி பேருக்கும் தலா 5,000 டாலர் வழங்கினால், அரசுக்கு 129 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். இது அரசுக்கு மிகப் பெரிய சுமையாகும். இந்தப் பணம் எப்படி வழங்கப்படும், யார் யார் தகுதியுள்ளவர்கள், பணம் எங்கிருந்து வரும் என்பது குறித்து தெளிவான விவரம் இன்னும் இல்லை. இவ்வளவு பெரிய தொகையை வழங்க, அரசிடம் போதிய நிதி ஆதாரம் இல்லை என்றும், அமெரிக்காவில் எந்தவொரு அரசு செலவுக்கும் பார்லிமென்டின் ஒப்புதல் தேவை என்பதால், டிரம்ப் தனியாக இந்த உத்தரவை பிறப்பிக்க முடியாது என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

முக்கியமான தேர்தல்!
விரைவில் நடக்க உள்ள தேர்தலில் வெற்றி என்பது, அதிபர் டிரம்புக்கு மிகவும் முக்கியமானது. அடுத்த இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் மசோதாக்கள் நிறைவேற, பார்லிமென்டில் பெரும்பான்மை தேவை. பிரதிநிதிகள் சபையில் உள்ள, 435 இடங்களுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. அதேபோல், செனட் சபையில், மொத்தம் உள்ள 100 இடங்களில், 35 இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, பிரதிநிதிகள் சபையில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி 230:205 என்ற விகிதத்திலும், சென்ட் சபையில் 51:49 என்ற விகிதத்திலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.

Source link