ராக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தை இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ளார். ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 30-ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல், வரலாற்றுப் பின்னணி, சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள் மற்றும் உரிமைக்கான குரல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ‘சிங்காரம்’ உருவாகியுள்ளது. நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராக உயர்வதை மையமாகக் கொண்டுள்ள இப்படம், சமூக விழிப்புணர்வுடன் நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளையும் இணைத்துப் பேசுகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். விழாவில் இயக்குநர், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் படத்தின் உருவாக்க அனுபவங்களையும், அதன் பின்னணியையும் பகிர்ந்துகொண்டனர். நடிகர் யோகி பாபு பேசுகையில், இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் கே.வி. கதிர்வேலு, ரமண பாலாஜி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார். மறைந்த நடிகர்கள் மனோபாலா மற்றும் மாரிமுத்து ஆகியோரை நினைவுகூர்ந்த அவர், மனோபாலா தனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தவர் என்று குறிப்பிட்டார். தன்னை நம்பி வாய்ப்பளித்த படக்குழுவினரின் ஊக்கமும் நம்பிக்கையும் முக்கியமானவை என்று தெரிவித்ததுடன், வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகும் ‘சிங்காரம்’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
