உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானியில் கடந்த ஆகஸ்ட் 8 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டார். கார்கே இந்த பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பிய பிறகு, பாஜகவினர் அந்த இடத்தில் மதச்சடங்கு செய்து ‘சுத்திகரிப்பு’ செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. கார்கே பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் அங்கே வந்து சென்றதையொட்டி அந்த இடத்தை சில சாதியவாதிகள் இவ்வாறான செயலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கு, கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்த ’சுத்திகரிப்பு சடங்கு என்பது தீண்டாமையின் மற்றொரு வடிவம்’ என்று குற்றம்சாட்டியதுடன், இதற்குக் காரணமானவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இருப்பினும், பாஜகவினர் இந்த சம்பவத்திற்கு ஆதரவாகப் பேசி வந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் சாதிய வன்கொடுமையின் ஒரு பகுதியாக இருப்பதாகக் குற்றம் சாட்டி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியின் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர் உத்தரகாண்ட், டெல்லி, சண்டிகர், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, டேராடூனில் உள்ள கடிகார கோபுரம் அருகே அமைந்துள்ள ஒரு கோயில் வளாகத்தில், பாஜகவினர் ஒன்று திரண்டு, ராகுல்காந்தியின் புகைப்படத்தை வைத்து ’புத்தி சுத்தி யாகம்’ நடத்தினர். அதாவது, ராகுல்காந்திக்கு நல்ல புத்தி வர வேண்டும் என்று அவர்கள் யாகம் நடத்தியாக பாஜகவினர் கூறினர். இதில், பாஜக எஸ்.சி பிரிவு மாநில தலைவர் மற்றும் இணை அமைச்சர் பல்வீர் குனியாலா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த சம்பவம் உத்ரகாண்ட் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது பாஜகவினரின் சாதிய மற்றும் பிற்போக்குத் தனத்தை அம்பலப்படுத்தும் வகையில் இருப்பதாகக் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், ’அனைவரும் சமம்’ என்ற அரசியலமைப்பிற்கு எதிராகவும், மூட நம்பிக்கைகளை ஆதரிப்பவர்களாகவும் பாஜகவினர் இருப்பதாகக் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
