“நல்ல மாற்றம் தான்” – முதல்வர் விஜய் தொடர்பான கேள்விக்கு சூரி பதில்

செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்து வழங்கும் இப்படத்தில் வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருக்க தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாகவும் சத்​ய​ராஜ், ரவீந்​திரா விஜய், அச்​யுத் குமார் உள்ளிட்டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களிலும் நடித்துள்ளனர். 

இப்படம் கடலில் நடக்கும் பாய்மரப் படகு போட்டியை மைய்யமாகக் கொண்டு உருவாகியுள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. அதில் கலந்து கொண்ட அனைவரும் படத்தை வெகுவாக பாராட்டினர். பின்பு வெளியான டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. 

இந்த நிலையில் ரிலீஸூக்கு இன்னும் சிறிது காலமே உள்ள நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் படக்குழுவினர் கோவை சென்றுள்ளனர். அங்கு சென்றவுடன் செய்தியாளர் சந்தித்து பேசினர். அப்போது சூரியிடம் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு தெரியும் நான் எங்கே இருப்பேன் என்று. சினிமாவில் காமெடியனாக இருந்த என்னை கதையின் நாயகனாக மாற்றி இந்த மண்டாடி மூலம் ஒரு கதாநாயகனாகவும் நம் மக்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். மக்கள் அங்கீகரித்தால் யாராக இருந்தாலும் எந்த துறையாக இருந்தாலும் ஒரு நல்ல இடத்தில் இருக்க முடியும். அதனால் மக்களுக்கு இன்னும் நல்ல படங்களை கொடுக்க ஆசைப்படுகிறேன். கண்டிப்பாக அது நடக்கும் என நம்புகிறேன்” என்றார். 

இதையடுத்து விஜய் அரசியலில் ஜெயித்தவுடன் நிறைய இளைஞர்கள் சட்டமன்றத்தை பார்க்கிறார்கள், இந்த மாற்றத்தை எப்படி பார்குறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அது நல்ல விஷயம் தான். காலை 9.30 மணிக்கு சட்டமன்றம் தொடங்கினால் அது முடியும் வரை பார்க்கிறார்கள். 5 வயது 10 வயது குழந்தைகளெல்லாம் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அது ஆரோகியமான விஷயம்” என்றார். பின்பு அவரிடம் விஜய் இல்லாத சினிமா துறை எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்கப்பட அதற்கு பதிலளித்த அவர், “விஜய் இல்லாத அவரது இடம் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது” என்றார். 

Source link