சென்னை: தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை தமிழகம் முழுக்க 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தர்மபுரி, சேலம், தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் வெயில் வாட்டி வதைக்கிறது. தினம் தினம் அதிகரிக்கும் வெயிலால் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் அனலாக தகிக்கிறது.
பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து குளிர்விக்கிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் மழை அவ்வப்போது மாலை அல்லது இரவு நேரங்களிலும் மழை கொட்டி வருகிறது. அவ்வப்போது காலை நேரங்களிலும் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் இன்று நள்ளிரவு 1 மணி வரை தமிழகம் முழுக்க 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதனால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
