“நாகரீக வரம்புகளை மீறிப் பேசுவது நல்லதல்ல” – திருமாவளவன் பரபரப்பு!

சென்னை ராஜா அண்ணாமலை மண்டபத்தில் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி திமுக மகளிர் தொண்டரணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் பேசிய பெண் நிர்வாகியும் சென்னையின் 95வது வார்டு கவுன்சிலருமான சுதா தீனதயாளன் என்பவர், முதல்வர் விஜய் குறித்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். திமுக மூத்த தலைவர்களான கனிமொழி, சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோரின் முன்பே திமுக கவுன்சிலர் சுதா, முதல்வர் விஜய்யை ஆபாசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக கவுன்சிலர் சுதாவின்  பேச்சுக்கு தவெக அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் இன்று (20-10-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் திமுக கவுன்சிலர் சுதா பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “நாகரீக வரம்பு மீறாமல் விமர்சனங்களை வெளிப்படுத்த வேண்டும். அதுதான் அரசியல் நாகரீகமாகும். அண்மை காலமாக பொது மேடைகளில் நாகரீக வரம்புகளை மீறி பேசும் ஒரு கலாச்சாரம் பரவி வருவது கவலை அளிக்கிறது. இத்தகைய போக்குகள் அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல. அரசியல் விமர்சனங்கள் எழுவது இயல்பு. ஆனால் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலையில் இருக்கக்கூடியவர்கள் நாகரீக வரம்புகளை மீறி பேசுகிற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது நல்லதல்ல” என்று கூறினார்.