நாகப்பட்டினம்: நாகையில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் சேவை அடிக்கடி நிறுத்தப்படுவதால், அரசே பொறுப்பேற்று இயக்க வேண்டும் என, கப்பல் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாட்டிற்கிடையில் வர்த்தகம், சுற்றுலா மற்றும் கலாசார உறவுகள் மேம்பட பயணிகள் கப்பல் சேவையை துவக்க முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, நாகையில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு சிறிய பயணிகள் கப்பல் இயக்க, பிரதமர் மோடி, இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிர சிங்கே முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து நாகை துறைமுகம் 5 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்டது.
இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 150 பயணிகள், பயணிக்கும் வகையில், குளிர்சாதன வசதியுடன் உருவாக்கப்பட்ட ‘சிரியா பாணி’ என்ற சிறிய கப்பல் பயணத்தை, 2022 அக்.,14 ம் தேதி, பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.
கடலின் பருவ மாற்றம் காரணமாக ஏற்பட்ட பிரச்னையால், சில தினங்களில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, பயணிகள் கப்பல் சேவை, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதையடுத்து, 2023ல் ஆக., 16ல், 150 பேர் பயணிக்கும் சிவகங்கை என்ற கப்பல் சேவையை தனியார் நிறுவனம் துவக்கியது. பருவ மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, 2025ம் ஆண்டு நவ., 18ல் கப்பல் சேவை நிறுத்தப்பட்டு, 2026ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி மீண்டும் துவக்கப்பட்டது.
இந் நிலையில், கப்பல் இன்ஜின் பழுதாகி கடந்த மே மாதம் 9ம் தேதி, கடல் பரப்பில் கப்பல் நின்றதால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும், கடந்த 7ம் தேதி, இலங்கையில் இருந்து நாகைக்கு திரும்பிய கப்பலில், எம்.எம்.டி., அலுவலர்கள், கப்பல் கடலில் இயக்க தகுதி குறித்து ஆய்வு செய்தனர்.
கப்பலில் சில குறைகள் கண்டறியப்பட்டு, பயணிகள் பாதுகாப்பு கருதி, பழுதுகளை சீரமைத்து, பின் தகுதி சான்று பெற்று இயக்க உத்தரவிட்டது. இதையடுத்து தற்காலிகமாக கப்பல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. குறைகள் சீரமைப்பு பணி நடக்கிறது. பணிகள் நிறைவடைந்தவுடன் கப்பல் சேவை துவக்கப்படும் எனவும் சிரமத்திற்கு வருந்துகிறோம் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் கூறுகையில், இருநாட்டிற்கான பயணிகள் கப்பல் சேவை இருநாட்டு தமிழர்களின் கனவு. மத்திய அரசின் முயற்சியால் துவக்கப்பட்ட கப்பல் சேவையால் இரு நாட்டு ஆன்மிக, வர்த்தக, கலாசார உறவுகள் மேம்பட்டுள்ளது. தனியார் இயக்கும் கப்பல் அடிக்கடி மக்கர் செய்கிறது. திடீர் திடீரென்று சேவை ரத்து செய்யப்படுகிறது.
இதனால் பயணிகள், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டியுள்ளது. மீண்டும் இருநாட்டிற்கான கப்பல் சேவையை, இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் ஏற்க வேண்டும் அல்லது அதிகளவில் கப்பல் இயக்க தனியாருக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும்’ என்றனர்.
