தமிழகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்திருந்த நிலையில், அதற்கான இடம் தொடர்பான விவாதம் தற்போது தீவிரமடைந்துள்ளது.
தற்போது சென்னை ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தலைமைச் செயலகத்தை, பழமை, போதிய இடவசதியின்மை உள்ளிட்ட காரணங்களால் மாற்ற தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக கோயம்பேடு, நந்தனம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திட்டப்பணிகள் தீவிரம்
பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கான இடவசதி மற்றும் அனுமதிகள் தொடர்பாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில், மிகப்பெரிய அரசு நிர்வாக வளாகத்தை அமைப்பதற்கான திட்டம் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
9 மீனவ கிராமங்கள் கடும் எதிர்ப்பு
இந்த திட்டத்திற்கு பட்டினப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம் உள்ளிட்ட ஒன்பது மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புதிய கட்டுமானத்திற்காக தங்களது குடியிருப்புகள் அகற்றப்பட்டு, தாங்கள் வாழும் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, தங்களது வாழ்வாதாரம் கடலை மையமாகக் கொண்டிருப்பதால், வேறு இடத்திற்கு மாற்றப்பட்டால் தங்களது பாரம்பரிய தொழிலை தொடர முடியாது என மீனவர்கள் கூறுகின்றனர்.
“நாங்கள் காலி பண்ண மாட்டோம்”
இது தொடர்பாக பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கூறுகையில், “நாங்கள் மீனவர்கள். இங்குதான் இருப்போம். தலைமைச் செயலகத்தை வேறு எங்காவது கட்டிக்கொள்ளட்டும். நாங்கள் காலி செய்ய மாட்டோம்; போராடுவோம்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “கடலைச் சுற்றித்தான் எங்களால் வாழ முடியும். எங்களை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றால் எங்களால் வேறு தொழில் செய்ய முடியாது. இங்கு தலைமைச் செயலகம் வருவதால் எங்களுக்கு என்ன பயன்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“வீடுகளை சரி செய்து கொடுத்தால் போதும்”
மற்றொரு தரப்பில், தங்களது வீடுகள் பழுதடைந்திருந்தால் அவற்றை அரசு சீரமைத்துக் கொடுக்கலாம் என்றும், ஆனால் வீடுகளை அகற்றிவிட்டு வேறு இடத்தில் குடியமர்த்துவதை ஏற்க முடியாது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களது வாழ்வாதாரத்தையும், பல ஆண்டுகளாக வசித்து வரும் குடியிருப்புகளையும் இழக்க விரும்பவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதனால், ஒருபுறம் புதிய தலைமைச் செயலகத்துக்கான இடத் தேர்வு மற்றும் திட்டப்பணிகள் தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் பட்டினப்பாக்கம் மீனவ கிராமங்களில் எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு எத்தகைய முடிவை எடுக்கப் போகிறது என்பதே தற்போது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
