போலீசில் புகாரளித்த மறுநாளே நடந்த பயங்கரம்; இளைஞர் வெட்டி படுகொ*லை!

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக காவல் நிலையத்தில் புகாரளித்த மறுநாளே இளைஞர் ஒருவர் நள்ளிரவில் கொடூரமாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் என்ற 26 வயது இளைஞர். இவர், நேற்று நள்ளிரவு நேரத்தில் அந்த பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர், அவரை மடக்கி தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டின அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த பிரதீப் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், பிரதீப்பின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே சமயம் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிரதீப்பின் தாயார் டில்லி ராணி, அதே பகுதியைச் சேர்ந்த நவநீதம் என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். ஆனால், நவநீதம் கூடுதலாக வட்டிப் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக நவநீதம், பிரதீப் மீது போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசர் பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இரு தரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், பிரதீப் நேற்று முன் தினம் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் நவநீதம் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தன்னை சிலர் கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகக் குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரதீப் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Source link