நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் பிரதமர் மோடி தயார்; மாணவர்களைத் தூண்டிவிடுகிறார் ராகுல் காந்தி: நமச்சிவாயம் சாடல்

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாகப் புதுச்சேரி மாநில பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.நீட் வினாத்தாள் கசிவு குற்றத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும், குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனையைப் பெற்றுத் தர மத்திய அரசு உறுதி அளிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் தெளிவாகக் கூறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், இளைஞர்களின் எதிர்காலம் நாட்டிற்கு மிக முக்கியமானது என்றும், மாணவர்களின் நலனைப் பாதுகாப்பதில் மத்திய அரசு மிகவும் உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்தச் சூழலில், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஜனநாயக ரீதியாக விவாதிப்பதற்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தயாராக இருந்தபோதிலும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் மாணவர்களைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் என்று நமச்சிவாயம் குற்றஞ்சாட்டினார். 

மேலும், போராட்டம் என்ற பெயரில் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்து, நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக ராகுல் காந்தி செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.  தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு கல்வித்துறைக்கு 3.9 லட்சம் கோடி ரூபாயைப் பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், போராட்டம் என்ற பெயரில் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் போக்கை விடுத்து, ஆரோக்கியமான அரசியலைச் செய்ய காங்கிரஸ் கட்சி முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ராகுல் காந்தியை கண்டித்துப் பாஜக நடத்திய போராட்டம் குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நமச்சிவாயம், பாஜக ஒருபோதும் போராட்டத்தைத் திசை திருப்பவில்லை என்றும், இப்போராட்டம் தொடர்பாகத் தங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டால் அதனைச் சட்டரீதியாகச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.  தொடர்ந்து, மாணவர்களுக்கு ஆதரவாகத் திரைப்பட இயக்குநர்கள் பா. ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் ஆகியோர் அறிவித்துள்ள போராட்டம் குறித்துக் கேட்டபோது, பாஜக எந்தவொரு நல்ல திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே கொள்கையோடுதான் அவர்கள் செயல்படுகிறார்கள் என்றும், அதன் காரணமாகவே தற்போது இப்போராட்டத்தை அறிவித்திருப்பதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.

செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Source link