எழுதியவர் : அதியா ஃபிர்தோஸ்
கடந்த ஜூலை மாதம் பெங்களூரில் வங்கதேசத்தைச் சேர்ந்த 22 வயதான அஸ்மா கத்தூன் என்பவர் சட்டவிரோதமாக குடியேறியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அஸ்மா 8 மாத கர்பிணியாக இருந்ததால் காவல் துறையினரின் குழு ஒன்று அவரது ஆரோக்கியத்தை கண்காணித்து சுகப்பிரசவம் நடக்க உதவி செய்தது. பின்னர் அவரை தாய்நாட்டிற்கு அனுப்பும் வரை அவரது பிறந்த பெண் குழந்தையையும் கவனித்து கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க
என்ன நடந்தது?
ரபிபுல் பாட்ஷாவின் மனைவியான அஸ்மா, அக்ரஹாரா காவல் நிலைய எல்லைக்குள் சட்டவிரோதமாக வசித்து வந்ததாக கூறி, ஜூலை 17 அன்று ‘ஆபரேஷன் முக்தா’ திட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் வெளிநாட்டினர் மண்டலப் பதிவு அலுவலகத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களின் உத்தரவின்படி தடுப்பு காவலில் உள்ள சிறப்பு பிரிவில் அடைக்கப்பட்டார்.
அவரது வழக்கை விசாரித்த காவல்துறையினர், அவரை வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்கு அழைத்து செல்வது, அத்தியாவசியப் பொருட்களை ஏற்பாடு செய்வது மற்றும் பிரசவத்திற்கு முந்தைய தேவையான பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்வது ஆகிய பணிகளைத் தொடங்கினர். ஒரு மாதத்திற்கு பிறகு, ஆகஸ்ட் 24 அன்று, அஸ்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, தனது இரண்டாவது பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
காவல்துறையினர் அஸ்மாவை தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பும் வரை அவரது நான்கு வயது மகள் மற்றும் பிறந்த பெண் குழந்தையை கவனித்து வந்துள்ளனர். இறுதியில் அஸ்மா, மேற்கு வங்கத்தில் உள்ள மால்தாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.
காவல் அதிகாரியின் பராமரிப்பில் கர்ப்பிணி பெண்
காவலில் வைக்கப்பட்ட குடியேறிகளை விசாரிக்கும் குழுவில் இடம் பெற்றிருந்த அக்ரஹாரா காவல் நிலையத்தின் சப்- இன்ஸ்பெக்டர் கலாவதி, அஸ்மாவுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். 6 மாத கர்ப்பிணியாக இருக்கும் கலாவதி, அஸ்மாவுக்கு தேவையான பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
“அவர் கர்ப்பத்தின் எட்டாவது மாதத்தில் இருந்ததால், வழக்கமான ஸ்கேன் மற்றும் பரிசோதனைகளுக்காக அவரை அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வோம். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதால் பெரியளவில் மருத்துவ செலவு எதுவுமில்லை. இருப்பினும், சானிட்டரி பேட்கள் மற்றும் குழந்தைக்கு தேவையான பொருட்கள் உட்பட அவரது மற்ற அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படுவதை நாங்கள் உறுதி செய்தோம்” என்று கலாவதி கூறினார்.
அஸ்மா அந்த மையத்தின் ஒரு சிறப்பு பிரிவில் வைக்கப்பட்டார், அங்குப் பெண் காவலர்கள் ஷிப்ட் முறையில் அவரை கவனித்து கொண்டனர். “ஒவ்வொரு நாளும் எங்களில் ஒருவர் அவருடன் இருப்போம். பெண் காவலர்களும் அதிகாரிகளும் அவர் கவனித்துக் கொள்ளப்படுவதை உறுதி செய்வார்கள்” என்று மேலும் கூறினார்.
ஆகஸ்ட் 24 அன்று அஸ்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது, பெண் காவலர் சந்திரகலா அவருடன் சென்றார். அவர் சிவாஜிநகரில் உள்ள கோஷ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார், அங்கு அவர் தனது இரண்டாவது பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மருத்துவமனைக்கு சென்றபோது தான் அஸ்மாவுக்கு சின்னம்மை பாதிப்பு ஏற்பட்டிருப்பதையும் காவலர்கள் தெரிந்துகொண்டனர்.
“பிரசவத்திற்குப் பிறகும், அவருக்கு தேவையான அனைத்தும் இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம். அதிகாரிகள் ஒத்துழைத்து, தாய் மற்றும் பிறந்த குழந்தை இருவரின் தேவைகளையும் கவனித்துக் கொண்டனர்” என்று கலாவதி கூறினார்.
அஸ்மா ஆகஸ்ட் 28 வரை மருத்துவமனையிலேயே இருந்தார். அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரும் அவருடைய குழந்தையும் மீண்டும் மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். எஃப்.ஆர்.ஆர்.ஓ-வின் நாடு கடத்தல் உத்தரவு நிறைவேற்றப்படும் வரை காவல்துறையினர் தொடர்ந்து அத்தியாவசிய ஏற்பாடுகளை கண்காணித்தனர்.
வங்காளத்திற்கு ரயில் பயணம்
குழந்தை பிறந்து 9 நாட்களே ஆன நிலையில், தாயையும் குழந்தையையும் மால்தாவிற்கு அழைத்து செல்ல கூடுதல் ஏற்பாடுகள் தேவைப்பட்டன. பெங்களூரு ரயில் நிலையத்திற்கும், அங்கிருந்து மால்தாவிற்கும் பயணம் செய்யும் போது, அஸ்மாவுடன் சென்று பிறந்த குழந்தையை கவனித்துக் கொள்ளும் பணி பெண் தலைமைக்காவலர் ஷீலாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
காவல்துறையினர் உணவு, ஆடைகள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான உடையை ஏற்பாடு செய்தனர். ஆகஸ்ட் 30 அன்று நடந்த பயணத்தின் போது தாயும் குழந்தையும் அத்தியாவசியப் பொருட்களை பெற்றிருப்பதை அவர்கள் உறுதி செய்தனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, அஸ்மா பாதுகாப்பாக மேற்கு வங்க காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.
