நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி: ராகுலை மறைமுகமாக சாடிய பிரதமர்

புதுடில்லி: ”உலக நாடுகள் அனைத்தும் ஒரு புதிய ஒழுங்கமைப்பை தேடும் வேளையில், நம் நாட்டில் உள்ள சிலர், சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்து குழப்பத்தை ஏற்படுத்த கனவு காண்கின்றனர்,” என, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை, பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக சாடினார்.

டில்லியில் நேற்று நடந்த தனியார் செய்தி நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: உலக நாடுகள் அனைத்தும் புதிய ஒழுங்கமைப்பை தேடும் வேளையில், நம் நாட்டில் உள்ள சிலர், குழப்பத்தை ஏற்படுத்த விரும்புகின்றனர்.

நாட்டின் நற்பெயரை கெடுப்பதிலேயே அவர்கள் ஆர்வமாக உள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று நாட்டை பற்றி அவதுாறாக பேசுவதுடன், வெளிநாட்டு சக்திகள் நாட்டின் விவகாரங்களில் தலையிட வேண்டும் என்றும் கெஞ்சுகின்றனர். காங்., தன் தோல்வியடைந்த தயாரிப்பை அறிமுகப்படுத்த, நாட்டின் நலனை எவ்வளவு காலம் பணயம் வைக்கும் என, தெரியவில்லை.

‘இஸ்ரோ’வின் ராக்கெட் ஏவுதல்களை விட, தங்கள் தலைவரை வெற்றிகரமாக முன்னிறுத்த காங்., மேற்கொள்ளும் முயற்சிகள் அதிகம். காங்., தன்னைத்தானே அழித்துக் கொள்வதில் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால், ஒரு குடும்பத்தின் தோல்வியை மறைப்பதற்காக, நாட்டின் சாதனைகள், பெருமை மற்றும் வளர்ச்சியை அக்கட்சி பணயம் வைக்கிறது.

நேரு – -காந்தி குடும்பம் தற்போது காங்கிரசுக்கே பெரும் சுமையாக மாறிவிட்டது. கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் இதை ஒப்புக்கொள்கின்றனர். ஆளுங்கட்சி தலைவர்களை சந்திக்கும் போது இதை அவர்களே தெரிவிக்கின்றனர். காங்கிரசை அறிவுசார் நக்சல்கள் ஆக்கிரமித்துவிட்டனர். சுயமாக சிந்திக்கும் திறனை அக்கட்சி இழந்துவிட்டது. கிராமப்புறங்களில் வன்முறையை அரங்கேற்றியவர்கள், தற்போது காங்கிரசுக்குள் நுழைந்து ஒட்டுமொத்த நாட்டையும் சீரழிக்க தயாராகி விட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

Source link