நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் 4வது சுற்றுக்கு கஜகஸ்தானின் ரிபாகினா, போலந்தின் ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப் உள்ளிட்டோர் முன்னேறினர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, உக்ரைனின் யுலியா ஸ்டாரோடுப்ட்சேவா மோதினர். இதில் ரிபாகினா 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு 3வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 7-6, 7-6 என, செக்குடியரசின் மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தினார். அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 6-4 என, ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சாவை தோற்கடித்தார். ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 3-6, 7-5 என, பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்சை வென்றார்.
மற்ற 3வது சுற்று போட்டிகளில் அமெரிக்காவின் மடிசன் கீஸ், அமண்டா அனிசிமோவா, பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஏலா அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.
ஸ்வெரேவ் வெற்றி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், சிலியின் அலெஜான்டிரோ டபிலோ மோதினர். ஸ்வெரேவ் 6-2, 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்திய ஜோடி தோல்வி
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி 6-7, 6-7 என, அமெரிக்காவின் ரியான், பாட்ரிக் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
* மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர், பெலாரசின் இவான் லியுடாரெவிச் ஜோடி 4-6, 7-5, 4-6 என, பிரிட்டனின் ஆர்தர் பெரி, ஜோஷுவா பாரிஸ் ஜோடியிடம் வீழ்ந்தது.
