அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு மற்றும் வடிவுக்கரசி உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘கான் சிட்டி’. ஒரு நடுத்தர குடும்பத்தின் யதார்த்த வாழ்க்கையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை, அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ளார். ‘பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மாதம் 26ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. நல்ல விமரசனத்தையே ரசிகர்களிடம் பெற்றது.
இந்த நிலையில் படத்திற்கு கிடைத்த வரவேற்பு தொடர்பாக நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் அர்ஜுன் தாஸ் பேசுகையில், “முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். படத்தின் முதல் காட்சி முடிந்தபிறகு வெளியே நின்றிருந்த அந்த சில நிமிடங்கள், தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவரின் பதற்றத்தைப் போலவே இருந்தது. படம் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. ஆனால், சிறிது நேரத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் சிரித்த முகத்துடன் வந்து படத்தைப் பாராட்டிய அந்த தருணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவாக இருக்கும்.
படம் வெளியான பிறகு பல திரையரங்குகளுக்கு சென்றோம். அங்கு குடும்ப ரசிகர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் படத்தை ரசித்த விதம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இந்த வெற்றிக்கான முழு பாராட்டும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் அவர்களுக்கே சேரும். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய ஹரிஷுக்கு நன்றி. கதை சொல்லும்போதே இந்தப் படத்தில் ஒரு கனவு நடிகர் பட்டாளம் இருக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அது நிஜமாகியிருக்கிறது. இவ்வளவு மூத்த மற்றும் திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெருமை. அவர்களுடன் என் பெயரும் ஒரே போஸ்டரில் இடம்பெற்றதே எனக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக உணர்கிறேன். எடிட்டர் அருள் மோசஸ், நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டர், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அகில்… இந்தப் படத்தில் முதல் முறையாக நான் ஒரு சிறுவனுக்கு அப்பாவாக நடித்தேன். படப்பிடிப்பின் முதல் நாளிலேயே என்னை அப்பா என்று அழைத்தபோது ஒரு புதிய உணர்வு ஏற்பட்டது. உன்னுடன் பணியாற்றியது மிகவும் இனிமையான அனுபவம். இந்தப் படத்திற்குப் பிறகு எல்லோரும் என்னை அப்பா கதாபாத்திரத்தில் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஹரிஷ் நகைச்சுவையாக சொல்வார். எதிர்காலத்திலும் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும். சதாவுக்கும் என் வாழ்த்துகள். படப்பிடிப்பின் போதே அவரிடம் நான் ஒரு விஷயம் சொன்னேன். படம் வெளியாகும் வரை வேறு எந்த வாய்ப்பையும் ஏற்க வேண்டாம். இந்தப் படம் வெளியான பிறகு உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என்று. இன்று அது நிஜமாகியிருப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார்” என்றார்.
