“நீட் தேர்வுக்கு எதிரான குரலை ஒடுக்குவதா?”

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தின் முன் பாடல் பாடி திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பிரபல தமிழ் ராப் இசைப் பாடகர், ‘தெருக்குரல்’ அறிவு மற்றும் அவருடன் வந்த 4 பேரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் தலைமைச் செயலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக, ராப் பாடகரும் என் அன்புச் சகோதரருமான ‘தெருக்குரல்’ அறிவைக் கைது செய்த விஜய் தலைமையிலான தமிழக அரசை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரது குரல், தமிழ்நாட்டின் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் பிரதிபலிக்கிறது.

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையிலான பேரணிகளும் போராட்டங்களும் வேகம் பெற்று வரும் வேளையில் தவெக அரசும் அறிவைக் கைது செய்யத் தேர்ந்தெடுத்துள்ளது. நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கத் திட்டமிட்டுள்ள தமிழக இளைஞர்களுக்கு இது ஒரு கவலையளிக்கும் செய்தியை அனுப்புகிறது. நீட் தேர்வு முறைகேடுகளால் நிறைந்தது மட்டுமல்ல; அது ஒரு மோசடியாகவும் மாறிவிட்டது. நீட் தேர்வுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்கள் கேட்கப்பட வேண்டுமே தவிர, ஒடுக்கப்படக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார். 

Source link