தேர்தல் முடிவுக்குப் பிறகு எங்களை நோக்கி வருவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறினேன். காங்கிரஸுடன் நிற்கும் எந்த கட்சியையும் பா.ஜ.க குறி வைத்து விடுவார்கள், ஆனால் நீங்கள் துணிச்சலாக காங்கிரஸ் ஆதரவை பெற்றீர்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போதே நீங்கள் துணிச்சலாக முடிவு செய்திருக்கிறீர்கள் என்று முடிவு செய்தேன். ஆனால் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது, திமுகவை தனிமைப்படுத்துவதற்காகத்தான் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறதோ? பின்னணியில் ஆர்எஸ்எஸ் போன்றவர்கள் இருக்கிறார்களோ? என்று நான் தயங்கித்தான் இடதுசாரிகள் எடுக்கிற முடிவோடு விடுதலை சிறுத்தைகளும் இணைந்து முடிவெடுப்போம் என்று சொன்னேன். நான் சொன்னதற்கு இதுதான் காரணம். இடதுசாரிகள் ஆதரவு தருவது நிலைப்பாட்டை எடுத்தார்கள், நாங்களும் எடுத்தோம்..
காங்கிரஸ் உங்களுக்கு ஆதரவு தந்தது, இடதுசாரிகள் ஆதரவு தந்தார்கள், நாங்களும் ஆதரித்தோம். மதசார்பற்ற சக்திகளாக இருக்கிற காங்கிரஸையும் இடதுசாரிகளையும் நீங்கள் உள்வாங்கி கொண்டபோது அங்கேதான் விடுதலை சிறுத்தைகள் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாங்கள் எடுத்தோம். இதை திமுகவிடம் நாங்கள் சொல்லிவிட்டு தான் நாங்கள் வெளியேறினோம். மதச்சார்பின்மை என்ற கருத்துக்கு இந்த பெயரில் முக்கியத்துவம் தரப்பட வேண்டும், மற்றபடி என்ன வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள் என்று விஜய்யிடம் சொன்னேன்.
உடனே அதை அவர் ஒப்புக்கொண்டார். சார் அதில் ஒன்றும் தப்பில்லை என்று கூறி மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்ற பெயரை அறிவித்தார். இப்போது எல்லா கட்சியும் சமூக நீதி பேசுகிறார்கள், மதச்சார்பின்மை போட்டால் தான் அங்கு பா.ஜ.க இடம் பெறாது என்று சொன்னேன். மதச்சார்பின்மைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கிற குரலை உயர்த்தி சொன்னவன் திருமாவளவன். மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி கொள்கை கோட்பாட்டின் அடிப்படையில் இன்றைக்கு உருவாகி இருக்கிறது. நமக்கு எந்த குற்ற உணர்வும் தேவையில்லை. என் உயிரின் உயிரான விடுதலை சிறுத்தைகளே சமூக வலைத்தளங்களில் எவன் எதை பேசினாலும் அதை கண்டுகொள்ள வேண்டாம் எதிர்வினையாற்ற வேண்டாம். இனி தமிழக அரசியல் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறுகிற கூட்டணி அரசியல் என்பதாகத்தான் வலிமை பெறும்” என்று கூறினார்.
