தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், குடியிருப்போர் நலச் சங்கத்தினரும் தங்களது பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகி உள்ளன.
ஒரு லட்சம் சிலைகள்
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, சேலம், வேலூர், விழுப்புரம் உள்பட அனைத்து மாவட்டங்களிலுமே விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் முழுவீச்சில் மேற்கொண்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் நாளை பூஜைக்காக பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
போலீஸ் கமிஷனர்
சென்னையில் கடந்த ஆண்டு 1,519 சிலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதேபோன்று இந்த முறையும் 1,500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி அளித்திருக்கிறார்கள். இதேபோன்று ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட சிலைகளும், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட சிலைகளும் வைக்கப்பட உள்ளன.
3 ஆயிரம் சிலைகள்
இதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் நாளை பூஜைக்காக நிறுவப்பட உள்ளன. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னையில் விநாயகர் சிலைகள் நிறுவுவது, வழிபாடு செய்வது குறித்தும், சிலைகளை அமைதியான முறையில் கடலில் கரைப்பது குறித்தும், விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் 29 இந்து அமைப்புகளை சேர்ந்த 200 பேர் கலந்து கொண்டனர்.
கட்டுப்பாடுகள்
விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கு சென்னை மாநகர போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பிறகே விழாவை நடத்துபவர்கள் சிலைகளை நிறுவ வேண்டும்.
தீயணைப்புத்துறை, மின்வாரியம் ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க உறுதியளித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
10 அடிக்கு மேல்
* விநாயகர் சிலைகள் சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களால் செய்திருக்க கூடாது.
* நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்தில் இருந்து 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது.
* பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்.
* மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது.
24 மணி நேரமும்
* சிலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த 2 தன்னார்வலர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.
* நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவான விளம்பர பலகைகைள வைக்கக்கூடாது.
* தீ விபத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்பு விதிமுறைகளும், விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும், மின்சார சாதனங்கள், பந்தல்கள் அவ்வப்போது கண்காணித்து, விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் பாதுகாப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
* விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட 4 சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று அமைதியான முறையில் கடலில் கரைக்க வேண்டும்.
பட்டாசு வெடிக்க தடை
* விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை.
* விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட இடத்தில் பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும்.
இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்துவதற்கு விழா ஏற்பாட்டாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை மாநகர போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
