நாளை மறுநாள் அக்., 23ல் உருவாகும் காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் அக்டோபர் 23ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை தெரிவித்தார் .

அவர் அளித்த பேட்டி: தென்மேற்கு வங்கக் கடலில், இன்று காலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தமிழகத்துக்கு மிக நெருக்கமாக உள்ளதால், இது மேலும் வலுவடைய வாய்ப்பு இல்லை. காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கம் காரணமாக, தென் மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வரும், 26ம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.

துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், நாளை இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி, ஈரோடு, அரியலுார், பெரம்பலுார், கடலுார், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர், கரூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் நாளை இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக இருக்கும்; ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில், தற்போது நிலவும் வளி மண்டல சுழற்சி, நாளை மறுநாள் அக்டோபர் 23ல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்புள்ளது. இது, மத்திய மேற்கு, வட மேற்கு திசையில் நகரும்போது, புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது. நவ., மாதம் இயல்பை விட கூடுதல் மழை பெய்யக்கூடும்.

நடப்பு ஆண்டில் அக்., 1 முதல் தற்போது வரை இயல்பை விட, 12 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. சென்னையில் மழை அளவை கணக்கிடுவதில், மாநகராட்சி அளிக்கும் விபரங்களுக்கும், வானிலை துறை விபரங்களுக்கும் வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்ததன் அடிப்படையில், மாநகராட்சி பராமரிக்கும் மழைமானிகளை சரிசெய்ய அறிவுறுத்தி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source link