சென்னை: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிளைச் சிறையில் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் (திமுக தலைவர்): “Breaking Bad-ஐ தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-ம் தொடங்கிவிட்டது. ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன்.
சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் லட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது. புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர். ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.”
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச் செயலாளர்): “வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல், அரசுக்கு நீதிமன்ற குட்டுகள் என ஏற்கெனவே சட்டத்துறை சந்தி சிரிக்க, மின்வெட்டு, மின் கொள்முதலில் ஊழல் என மின்துறை பியூஸ் பிடுங்கிய நிலையில் இருக்க, தற்போது சிறைத் துறையும் அந்த லிஸ்டில் சேர்ந்துவிட்டது.
மூன்று துறைக்கும் அமைச்சர் ஒருவர் தான் என்பது தான் இதில் ஹைலைட். எப்போது பார்த்தாலும் “மைக்” வெறி பிடித்து அலைந்து, தூக்கத்தில் கூட “அண்ணாதிமுக புராணம்” பாடிக் கொண்டிருக்கும் சிடிஆர்.நிர்மல் குமாரின் நிர்வாக லட்சணத்தைக் கண்டு ஊரே கைகொட்டிச் சிரிக்கிறது. வெட்கக்கேடு.
ஏற்கெனவே புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய போதே தமிழக சிறைகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் இந்த அரசுக்கோ, அமைச்சருக்கோ நேரம் இல்லை போலும். அது சரி, புழல் ஜெயிலுக்கு ஆய்வுக்கு எல்லாம் போனீர்களே முதல்வர் விஜய். நீங்கள் ஆய்வு நடத்தியுமா சிறைத்துறை இப்படி இருக்கிறது? நீங்கள் நடத்தியது ஆய்வு தானா? அல்லது, சில பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் போல ஜோதிடப் பரிகாரமா?
கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடும் நிலையில் தான் சிறைச்சாலையே இருக்கிறது என்றால், சாமானிய மக்கள் செல்லும் சாலைகளிலே இந்த திக்குத் தெரியாத ஆட்சியில் எப்படி பாதுகாப்பு இருக்கும்?
அதிகரிக்கும் கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆளுங்கட்சி நிர்வாகியின் போதைப்பொருள் புழக்கம், தொடர்ந்து மாயமாகும் குழந்தைகள், சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட்டம், இவற்றை எல்லாம் தொகுத்து இன்றைய ஆச்சரியக்குறி ஆட்சியாளர்கள் “150 நாள் வெற்றி மலர்” வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தப்பியோடிய கைதிகளை பிடித்து மீண்டும் சிறையில் அடைப்பதுடன், தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கில் ஒழுங்காக கவனம் செலுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.”
உதயநிதி ஸ்டாலின் (சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்): “சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு அந்த 17 கைதிகளும் தப்பி இருக்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சிறைத்துறை எந்த அளவுக்கு சீரழிந்து போயுள்ளது என்ற கேள்வி எழுகிறது?
சமீபத்தில் புழல் மத்திய சிறைக்கு ஆய்வுக்குப் போன முதலமைச்சர், அதனடிப்படையில் எடுத்த நடவடிக்கை என்ன?
தமிழ்நாடெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஏதேனும் உத்தரவுகளை பிறப்பித்தாரா?
ஒரு பக்கம் குழந்தைகள் வீட்டிலிருந்து மாயம் – மறுபக்கம் கைதிகள் சிறையில் இருந்து ஓட்டம் என்று சட்டமின்மையின் அடையாளமாக ஆட்சி நடத்துவது தான் இந்த டம்மி முதலமைச்சரின் சாதனை.”
அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவர்): “தேனி மாவட்ட சிறையில் கைதிகள் 17 பேர் சிறைக் காவலர்களை தாக்கி விட்டு தப்பி ஓடியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. போக்சோ வழக்குகள் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கைதிகள் தப்பிச் செல்லும் அளவுக்கு மாவட்ட சிறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவீனமாக இருந்தது கண்டிக்கத்தக்கது.
திரைப்படக் காட்சிகளில் மட்டுமே இடம் பெற்று வந்த கைதிகள் தப்பி ஓடுவது போன்ற காட்சிகள், நிஜத்திலும் நடக்கத் தொடங்கியிருப்பது நல்லதல்ல. சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறை, சிறைத் துறை போன்றவற்றின் நிர்வாகம் பலவீனமடைந்து வருவதையே இது காட்டுகிறது.
மாவட்ட சிறையில் இருந்த அனைத்து காவலர்களையும் தாக்கி விட்டு, ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பி ஓடியிருப்பதை மிகவும் சாதாரணமான நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியாது. சிறைத்துறையின் தோல்வியையே இது காட்டுகிறது.
சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓடியதாகக் கூறப்படும் நேரத்திற்கும், இந்த நிகழ்வு குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நேரத்திற்கும் அதிக இடைவெளி இருப்பது இந்த நிகழ்வு குறித்து பல ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. கைதிகள் தப்பி ஓடி 12 மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை 4 பேர் மட்டும் தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். கைதிகள் தப்பி ஓடியதன் பின்னணியில் ஏதேனும் திட்டம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். இந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
மாணிக்கம் தாகூர் (தமிழக காங்கிரஸ் தலைவர்): “தேனி சிறையில் காவலரைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடியுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் கடுமையான கவலையையும் அளிக்கிறது.
இது திடீரென நிகழ்ந்த ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. கடந்த 2023-ல் விழுப்புரத்திற்குப் பேருந்தில் கொண்டு செல்லப்பட்டபோது இலங்கை கைதி ரியாஸ் கான் தப்பியோடியது, திருச்சி மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனைக் கைதி தப்பியது, 87 வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளி பாலமுருகன் போலீஸ் பிடியிலிருந்து மீண்டும் மீண்டும் தப்பியது, சேலத்திலிருந்து கோவைக்குக் கொண்டுசெல்லும்போது பெருந்துறை அருகே கைதி தப்பியது மற்றும் செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் காவலர்களைத் தாக்கிவிட்டு 12 பேர் தப்பியோடியது எனத் தமிழகத்தில் ஏற்கனவே பலமுறை சிறைக் கைதிகள் தப்பிக்கும் தொடர் பாதுகாப்புக் குளறுபடிகள் அரங்கேறியுள்ளன.
முந்தைய நிகழ்வுகள் அனைத்தையும் உற்றுநோக்கினால், தமிழகச் சிறைத்துறையில், அதிலும் குறிப்பாகப் புறநகர் மற்றும் கிராமப்புற சிறைகளில் அடிப்படைக் கட்டமைப்புத் தொடர்ந்து பலவீனமாகவே இருந்து வருவது தெளிவாகிறது. கிராமப்புறச் சிறைகளில் உடனடி முறையான கட்டமைப்பு மாற்றங்களும், தீவிரச் சீர்திருத்தங்களும் மிக அவசியமாகத் தேவைப்படுகின்றன.
சிறைத்துறையை முறையாகக் கண்காணிக்கத் தவறி, இத்தகைய பாதுகாப்புச் சீர்கேட்டிற்கு வழிவகுத்த உயர் மட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி தமிழக அரசு பாரபட்சமின்றித் துறைசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தப்பியோடிய மற்ற கைதிகளை உடனடியாகப் பிடிப்பதோடு, புறநகர்ச் சிறைகள் உட்பட ஒட்டுமொத்தத் தமிழகச் சிறைத்துறையையும் முழுமையாக மறுசீரமைக்க உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.”
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்): “ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தப்பிச் செல்லும் அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவீனமாக இருப்பது, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மற்றும் சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. சிறைச்சாலைகள் என்பது குற்றவாளிகளைச் சட்டப்படி தண்டித்து, தண்டனை வழங்கும் ஒரு இடமாகும். அத்தகைய சிறைச்சாலையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் என்பது சாதாரணமான ஒன்றல்ல. இது சிறைத்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய குறைபாட்டையே வெளிப்படுத்துகிறது.
தமிழகத்தில் ஏற்கெனவே சட்டம் – ஒழுங்கு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது சிறைச்சாலையிலேயே இத்தகைய சம்பவம் நடைபெற்றிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 17 கைதிகள் எவ்வாறு தப்பிச் சென்றார்கள்?
சிறைச்சாலையில் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? கண்காணிப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டனவா என்ற கேள்விகளுக்கு தமிழக அரசு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும். தப்பியோடிய கைதிகளை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்வதற்குத் தமிழக காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தி, பாதுகாப்புக் குறைபாடுகளுக்குக் காரணமானவர்கள் யார் என்பதைத் தெளிவுபடுத்தி, தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசே, சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. தப்பி ஓடிய பிறகு கைதிகளை கைது செய்வது என்பது கேள்விக்குறியது.”
டிடிவி தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): “கடந்த சில தினங்களுக்கு முன்பு புழல் சிறையிலிருந்து இரு கைதிகள் தப்பியோடிய நிலையில், அச்சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தவெக அரசின் சட்டத் துறை மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர், அத்துறைகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளையும் நிர்வாகச் சீர்கேடுகளையும் சரிசெய்வதில் கவனம் செலுத்தாமல், தனது விளம்பர மோகத்திற்காகவும் தனது இருப்பைக் காட்டிக்கொள்வதற்காகவும் செலுத்தும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது தனது துறைகளின் செயல்பாடுகளில் காட்டியிருந்தால், தொடர் மின்வெட்டு முதல் கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் வரை பல்வேறு பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியும்.
ஏற்கெனவே, தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வரும் நிலையில், சிறையிலிருந்து ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடியிருப்பது மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் பதற்றத்தையும் மேலும் அதிகரித்துள்ளது.
சிறைச்சாலைகளில் போதிய எண்ணிக்கையில் காவலர்கள் பணியில் உள்ளனரா? கண்காணிப்புக் கேமராக்கள் முழுமையாகச் செயல்படுகின்றனவா? கைதிகளின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கான நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா? உயர் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்கிறார்களா? இத்தகைய அடிப்படைக் கேள்விகள் எழுவதோடு சிறை நிர்வாகத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதாகக் கூறி, புழல் சிறையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்ட நிலையில், தற்போது அடுத்தடுத்து கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது அவரது ஆய்வின் நோக்கம் குறித்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. உண்மையிலேயே சிறை நிர்வாகத்தின் குறைபாடுகளைக் கண்டறிந்து களைவதற்காக ஆய்வு மேற்கொண்டாரா? அல்லது சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளைப் போல, ஜோதிடரின் அறிவுரைப்படி பரிகாரம் செய்வதற்காகச் சென்றாரா என்ற சந்தேகம் மக்களிடையே எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
எனவே, சிறைக் காவலர்களையே தாக்கிவிட்டுக் கைதிகள் தப்பியோடும் அளவிற்குப் பாதுகாப்புக் குறைபாடுகள் நிலவுவது, தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், கண்காணிப்பில் நிலவும் அலட்சியத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள இச்சூழலில், தப்பியோடிய கைதிகளால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன்பாக அவர்களை விரைந்து கண்டறிந்து கைது செய்வதோடு, மாநிலத்திலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டும் எனச் சிறைத்துறையையும், இவ்விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் விஜய்யை கேட்டுக்கொள்கிறேன்.”
வானதி சீனிவாசன் (பாஜக): “தேனி மாவட்டச் சிறையிலிருந்து நேற்று இரவு சுமார் 17 கைதிகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக நாடகமாடி, சிறைக் காவலர்களைத் தாக்கி தப்பிச் சென்றதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சினிமாவையே மிஞ்சும் இந்தச் சம்பவம், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் தவெக அரசு எந்த அளவுக்குத் தோல்வியடைந்திருக்கிறது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
காவல் துறை வெளியில் இருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்வதில் தான் அலட்சியம் காட்டுகிறது என்றால் சிறைக்குள் இருக்கும் கைதிகளைக் கண்காணிப்பதிலும் படுதோல்வி அடைந்திருக்கிறது. இத்தனை காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தும் சுமார் 17 கைதிகள் தப்பிச் செல்லும் அளவுக்கு சிறைத் துறையின் பாதுகாப்பு சீர்குலைந்திருப்பது கேள்விக் குறியாகியுள்ளது. தொடர்ந்து தமிழக மக்களின் பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கையும் உறுதிசெய்ய தவறி வரும் தவெக அரசு, தனது நிர்வாகத் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும்.”
