முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல் குமார் சட்டப்பேரவையில் பேசிய கருத்துகளுக்கு எதிராக திமுக சார்பில் ஏற்கனவே உரிமை மீறல் கடிதம் வழங்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இன்று சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலரை சந்தித்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலரை திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கனவே திமுக சார்பில் சபாநாயகரிடம் உரிமை மீறல் கடிதம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது முன்னாள் திமுக அமைச்சர்களான எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அமைச்சர் நிர்மல் குமார் பேச்சுக்கு எதிர்ப்பு
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் அவரது செயலாளராக இருந்த வைத்தியலிங்கம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பேசிய கருத்துகளுக்கு எதிராக திமுக சார்பில் ஏற்கனவே உரிமை மீறல் கடிதம் வழங்கப்பட்டிருந்தது. சட்டப்பேரவையில் அமைச்சர் பேசிய கருத்துகள் அவையின் விதிமுறைகளுக்கும் எதிர்க்கட்சியினரின் உரிமைகளுக்கும் எதிராக இருப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக உரிமை மீறல் குழுவின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தி வருகிறது.
சட்டப்பேரவையில் வெடித்த திமுக – தவெக மோதல்
நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா காலத்தில் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கருத்துகளை தெரிவித்திருந்தார். மேலும், சர்க்காரியா கமிஷன் தொடர்பான குறிப்புகளையும் சட்டப்பேரவையில் எடுத்துரைத்திருந்தார்.
அப்போது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் முதல் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வரையிலான திமுக குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து முதலமைச்சர் விஜய் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுகதரப்பிலும் எதிர்வினைகள் முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து திமுக மற்றும் தவெக இடையே மாறி மாறி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
உரிமை மீறல் குழுவின் பங்கு என்ன?
சட்டப்பேரவையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவிப்பது அல்லது எதிர்க்கட்சிகளின் உரிமைகளை பாதிக்கும் வகையில் செயல்படுவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக உரிமை மீறல் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு உறுப்பினர் அல்லது அமைச்சர் அவையின் விதிமுறைகளை மீறியதாக கருதப்படும் நிலையில், அது தொடர்பான புகார் அல்லது உரிமை மீறல் கடிதம் சபாநாயகரிடம் அளிக்கப்படும். அதனை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவது தொடர்பாக சபாநாயகர் முடிவு எடுப்பார்.
சபாநாயகர் முடிவு என்ன?
இந்த நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்ட உரிமை மீறல் கடிதம் தொடர்பாக திமுக நிர்வாகிகள் இன்று சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலரை சந்தித்து பேசியுள்ளனர். அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாக கூறப்படும் கருத்துகள் மற்றும் சட்டப்பேரவையில் நடைபெற்ற அரசியல் மோதல்கள் தொடர்பாக திமுக அளித்துள்ள புகார் மீது அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதவ் அர்ஜுனா பேச பேச திமுகவினர் கடும் கூச்சல்!
குறிப்பாக, உரிமை மீறல் கடிதத்தை குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவது தொடர்பான அதிகாரம் சபாநாயகரிடம் இருப்பதால், இந்த விவகாரத்தில் அவரது முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
Source link
