92 முதுகலை மாணவர்களுக்குமஹிந்திரா அறக்கட்டளை நிதி
மஹிந்திரா குழுமத்தின் கீழ் செயல்படும் கே.சி., மஹிந்திரா கல்வி அறக்கட்டளை, கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 92 முதுகலை மாணவர்களுக்கு 4.2 கோடி ரூபாய்க்கு வட்டி இல்லா கடன் வழங்கியுள்ளது. இந்த அறக்கட்டளையின் 70ம் ஆண்டை கொண்டாடும் விதமாக, கல்வி நிதியுதவி திட்டத்தின் கீழ் முதல் முறையாக முதுகலை படிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.
கையகப்படுத்தல் நிதி சந்தையில்கால்பதிக்கும் பி.என்.பி., வங்கி
பொது துறையை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவன கையகப்படுத்தல்களுக்கு நிதி வழங்கும் வணிகத்தில் கால்பதிக்க உள்ளதாக இவ்வங்கியின் மேலாண் இயக்குநர் அசோக் சந்திரா தெரிவித்துள்ளார். வங்கிகள் நிதி வழங்க ஆர்.பி.ஐ., அனுமதி அளித்துள்ள நிலையில், இந்நட வடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
‘பேடிஎம் மனி’யில் ரூ.100 கோடிமுதலீடு செய்ய பேடிஎம் திட்டம்
பின்டெக் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ், தனது வெல்த் டெக் பிரிவான ‘பேடிஎம் மணி’ நிறுவனத்தில் 100 கோடி ரூபாய் வரை கூடுதல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக பங்குச்சந்தை ஆவணத்தில் தெரிவித்துள்ளது. தங்களின் டிஜிட்டல் நிதி சேவை விநியோக கட்டமைப்பை பலப்படுத்தும் நோக்கில் இந்த கூடுதல் முதலீடு மேற்கொள்ளப்படுகிறது.
அவியோம் கையகப்படுத்தல் திட்டம்ஆர்.பி.ஐ., அதிகாரப்பூர்வ ஒப்புதல்
அவியோம் இந்தியா ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தை 936 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தும் அரையான் குழுமத்தின் திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. அக்குழும நிறுவனர் மணீஷ் லால்வானிக்கு தகுதி சான்றளித்துள்ள ஆர்.பி.ஐ., தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் இறுதி ஒப்புதலுக்காக இத்திட்டத்தை அனுப்பியுள்ளது.
ஏ.ஐ தகவல் மையம் புனேவில் அமைக்கும் டி.சி.எஸ்.,
ஐ.டி நிறுவனமான டி.சி.எஸ்., புனே மற்றும் விசாகப்பட்டினத்தில் ஏ.ஐ., தகவல் மையத்தை அமைக்க நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. அந்நகரங்களில், அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட ஓப்பன் ஏ.ஐ.,யின் தகவல் மையத்தை டி.சி.எஸ்., நிறுவனம் அமைக்க உள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் 1 ஜிகாவாட் தகவல் மையத்தை கூகுள் விசாகப் பட்டினத்தில் அமைத்துள்ளது.
