நீட் போராட்டத்தை நடத்தியவர்கள் சாக்கடை தலைமுறையினர்; கங்கனா ரணாவத் கடும் தாக்கு

நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய தன்னெழுச்சி போராட்டம் ஆளும் பாஜக அரசைக் கலங்கடித்துவிட்டது. இளைஞர்களின் தீவிர போராட்டத்தைக்  கண்டு அஞ்சி நடுங்கிய பாஜக அரசு, இறங்கி வந்து இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றது.  அதன்படி, பாஜக அமைச்சரும் பதவி விலகினார். 

இந்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, பாஜகவைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது. அதனால், பாஜக தரப்பில் இருந்து பெரும்பாலும் யாரும் இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நடிகையும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ள பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த போராட்டத்தைக் குறித்து தனது சமூக வலத்தளப் (இன்ஸ்டாகிராம்) பக்கத்தில், “இந்த ஜென்-சி தலைமுறையினர் ஒரு சாக்கடை தலைமுறையினர். போராட்டங்களில் கலந்துகொண்ட இளைஞர்கள் பயன்படுத்திய மொழி மற்றும் அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் வாந்தி வருவது போல் இருந்தது.  இந்த ஜென்-சி தலைமுறையின் வளர்ப்பு சரியில்லை’ என்று விமர்சித்தார். 

மேலும், போராட்ட களத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை பதிவிட்டு, ”என் வாழ்நாளில் இவ்வளவு அசிங்கத்தை ஒரே இடத்தில் நான் பார்த்ததில்லை. இந்தியா என்பது நேர்த்தியால் போர்த்தப்பட்ட நாடு. இது பலதரப்பட்ட மக்கள் வாழும் அழகான நாடு. நீங்கள் அழுக்கு, குப்பை, அசிங்கத்தை இந்த உலகத்தின் மீது திணிக்கிறீர்கள். இந்த வீடியோக்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது. எனக்குச் சிறிது ஆறுதல் தேவை, டிஜிட்டல் டிடாக்ஸ்” என்று குறிப்பிட்டிருந்தார்.  

மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கொச்சைப்படுத்தும் விதமாக கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என பலதரப்பட்டவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.  

Source link