நீட் வினாத்தாள் கசிவை எதிர்த்து போராடிய மாணவர்களை விடுதலை செய்யுங்க!: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

– டில்லி சிறப்பு நிருபர் –

‘நீட்’ வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில், ‘மாணவர்கள் மீது எவ்வித கடுமையான நடவடிக்கையும் எடுக்க கூடாது’ என, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், குற்றப்பின்னணி இல்லாத மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறும், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கும்படியும் உத்தரவில் தெரிவித்துள்ளது.

‘நீட்’ வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளை கண்டித்து, டில்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின்போது, மாணவர்களிடம் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

ஏற்க முடியாது

அப்போது மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கி, ஆணி பொருத்தப்பட்ட லத்தி, மின்சார லத்தி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தியதால் பல மாணவர்கள் மற்றும் இளம்பெண்கள் படுகாயமடைந்ததாக, மனுதாரர்கள் சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

மத்திய அரசு மற்றும் டில்லி போலீஸ் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”மாணவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய சில சமூக விரோதிகளே இப்போராட்டத்தில் ஊடுருவி வன்முறையை துாண்டி உள்ளனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்,” என வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு: வரம்பை மீறி சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

போராட்டத்தில் 250க்கும் மேற்பட்ட போலீசார் தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மாணவர்களா அல்லது போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகளா என்பது குறித்தும் நியாயமாக விசாரிக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அரசியலமைப்பு உரிமை வழங்கி இருக்கிறது. போராட்டத்தை காரணம் காட்டி, போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதை ஒருபோதும் ஏற்க முடியாது.

போராட்டம் நடந்த மாநிலங்களில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், வீடியோ ஆதாரங்கள், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள், போலீசாரின் உடலில் பொருத்தப்பட்ட கேமரா பதிவுகள், ஒயர்லெஸ் உரையாடல்கள் உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் ஆதாரங்களையும் உடனடியாக பாதுகாத்து வைக்க வேண்டும்.

Image 1603471

வெளியிடக்கூடாது

சேகரிக்கப்பட்ட டிஜிட்டல் தகவல்களை பொதுவெளியில், வெளியிடக்கூடாது. டில்லி, மஹாராஷ்டிரா, பீஹார், கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேச மாநில தலைமை செயலர்கள் இது குறித்து விரிவான பதில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக நியாயமாகவும், சுதந்திரமாகவும் விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட வேண்டும். போராட்டத்தின்போது காயமடைந்த போலீசாரின் குடும்பத்தினர் எழுப்பிய கவலைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.

டில்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக கைது போன்ற கடுமையான நடவடிக்கைகள் தற்போதைக்கு எடுக்க கூடாது. அதே சமயம், குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link