கேரள மாநிலம், கொச்சியில் நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டியதாகக் கூறப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதி ஒருவர் உயிரிழந்த வழக்கில், விசாரணையில் குளறுபடி ஏற்பட்டதாக புகார் எழுந்தது. கொச்சி நகர போலீஸ் கமிஷனர் காளிராஜ் மகேஷ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கமிஷனராக நிஷாந்தினி நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில், கடந்த அக்., 25ம் தேதி அதிகாலை, கூடுவண்டிச் சாலையில் நடந்து சென்ற ஜெயபாலகிருஷ்ணன், 55, என்பவர் மீது மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதியது. இதில் அவர் உயிரிழந்தார். காரை கூடுதல் மாவட்ட நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டியதாக விசாரணையில் தெரியவந்தது.
விபத்து நடந்த சில மணி நேரங்களில் சிறுவன் போலீஸ் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சிறுவன் மீண்டும் காவலில் எடுக்கப்பட்டு, வழக்கில் கடுமையான சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. காரின் உரிமையாளரான நீதிபதி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, வழக்கின் விசாரணை மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. நீதிபதியின் இல்லத்தில் சோதனை நடத்தி, கண்காணிப்பு கேமரா பதிவுகள் சேகரிக்கப்பட்டன. கார் அதிவேகமாகச் சென்றதை காட்டும் காணொளி ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் போலீசாரின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருந்ததாக புகார் எழுந்தது.
செரானல்லூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நான்கு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது, கொச்சி நகர போலீஸ் கமிஷனர் காளிராஜ் மகேஷ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நிஷாந்தினி நியமிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கின் விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
