நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்!

ஊத்தங்கரை தொகுதி த.வெக. எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரைப் பேரம் நடத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கருதிய இருவரும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகினர். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கப்பட்டது. 

அதாவது குறிப்பிட்ட காலத்திற்குத் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்றம் விதித்த நிபந்தனையின்படி அவர்கள் ஆஜராகவில்லை. இத்தகைய சூழலில் தான் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார், “விசாரணை என்ற பெயரில் எங்களைத் துன்புறுத்தக் கூடாது. விசாரணைக்கு அழைக்க வேண்டுமெனில் சட்டப்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும்” என உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதன்படி இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் அமர்வில் நேற்று முன்தினம் (22.07.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வாதிடுகையில், “மனுவில் பொதுவான குற்றச்சாட்டுகள் மட்டுமே கூறப்பட்டுள்ளதால் விரிவான பதில் தாக்கல் செய்ய அவகாசம் தேவை” எனத் தெரிவிக்கப்பட்டது. 

அதே சமயம், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், “குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன் பெற்ற இருவரையும் வேறு வழக்கில் கைது செய்யப்பட்ட வாய்ப்புள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் தலையிடவில்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறோம். சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது” என வாதிட்டார். இவ்வாறு இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “வழக்கில் முன்ஜாமீன் பெற்றிருந்தாலும், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை இதுவரை அவர்கள் பின்பற்றவில்லை. கீழமை நீதிமன்றத்தில் ஆஜராகி தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளவில்லை. 

இன்னும் சரணடையாத நிலையில் காவல்துறையினர் துன்புறுத்தக் கூடாது என்று முன்கூட்டியே உத்தரவு வழங்க முடியாது. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நடவடிக்கைகளை முன்வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது” எனத் தெரிவித்தார். இதையடுத்து, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் செந்தில் பாலாஜி, முன்ஜாமீன் நிபந்தனையின்படி பிணைத்தொகை செலுத்துவதற்காகச்  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று(24.07.2026) ஆஜரானார். இதனைத் தொடர்ந்து, முன்ஜாமீனுக்கான பிணைத்தொகையை செலுத்தும் நடைமுறையைச் செந்தில் பாலாஜி, மேற்கொண்டார். இதையடுத்து, உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின்படி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆஜராகி கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link