திருப்பூர்: பஞ்சு மற்றும் நுால் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நுாற்பாலை சங்கங்களுடன் வரும் 9ம் தேதி கலந்தாய்வு நடத்த, திருப்பூர் டெக்ஸ்டைல் கிளஸ்டர் கூட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
நுால் விலை மாதத்திற்கு இருமுறை உயர்த்தப்படுவதால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தித் துறையில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. பஞ்சு மற்றும் நுால் விலை நிலையாக இருந்தால் மட்டுமே ஜவுளி தொழில் சீராக இயங்க முடியும் என, திருப்பூர் டெக்ஸ்டைல் கிளஸ்டர் கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் உள்ளிட்ட ஒன்பது தொழில் அமைப்புகள் இணைந்து, ‘திருப்பூர் டெக்ஸ்டைல் கிளஸ்டர்’ கூட்டுக்குழுவை அமைத்துள்ளன.
இந்த கூட்டுக்குழு வாயிலாக, நுால் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சி துவங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நுாற்பாலைகள் சங்கங்களுடன் இணைந்து ஆலோசனை நடத்தி, மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுக்குழு நிர்வாகிகள் கூறுகையில், ‘வரும் 9ம் தேதி பாப்பீஸ் ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. தென்னிந்திய நுாற்பாலைகள் சங்கம், தமிழ்நாடு நுாற்பாலைகள் சங்கம், திருப்பூர் நுால் உற்பத்தியாளர்கள் சங்கம், இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

