ஒவ்வொரு ஆண்டும் பொங்கல், தீபாவளி, முகூர்த்த நாட்கள் போன்ற பண்டிகை காலங்களில் பூக்கள் விலை உயர்வதை போன்று ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் பல மடங்கு உயர்வது வழக்கமாகிவிட்டது. சாதாரண நாட்களில் வெறும் ரூ.600, ரூ.800 போன்ற கட்டணங்கள் வசூலிக்கப்படும் நிலையில் விழாக் காலங்களில் அவை மூன்று மடங்காக உயர்ந்து ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை வசூலிக்கப்படுகின்றன.
பஸ் எங்கடா? அமெரிக்காவுல கார் இல்லனா ஜெயில் தான்; திகைத்து போன இந்திய பெண்
என்னதான் தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும் ஆம்னி பேருந்துகளில் செல்லும் பயணிகளும் இருக்க தான் செய்கிறார்கள். வெளியூரில் வேலை பார்க்கும் பலரும் விஷேச நாட்களில் தான் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் அவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பெரும் தலைவலியாக இருக்கும்.
செப்டம்பர் 14-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு வரை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து வழக்கமாக கோவைக்கு செல்ல ரூ.1,000 வசூலிக்கப்படும். ஆனால் தற்போது தொடர் விடுமுறையை முன்னிட்டு ரூ.3,000 வரை வசூலிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்ல ரூ.6,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும், பண்டிகை கால கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி இத்தகைய கட்டணக் கொள்ளை நடப்பதாக பயணிகள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர்.
