சென்னை: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், லஞ்சம் வாங்கும் தற்காலிக பணியாளர்களை, உடனே பணியில் இருந்து விடுவிக்குமாறு, அதிகாரிகளுக்கு அமைச்சர் வெங்கடரமணன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக விவசாயிகளிடம் இருந்து, மத்திய அரசு சார்பில், நெல் கொள்முதல் செய்யும் பணியை, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொள்கிறது. கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள், விவசாயிகளிடம் இருந்து நெல்லை வாங்க, மூட்டைக்கு, 40 – 50 ரூபாய் லஞ்சமாக வசூலிக்கின்றனர். இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
அமைச்சர் வெங்கடரமணன், சென்னை கோயம்பேட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில், நெல் கொள்முதல், ரேஷன் பொருட்கள் கொள்முதல் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில், ”நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்கும் தற்காலிக பணியாளர்களை, உடனே பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். நிரந்தர பணியாளர்கள் மீது, துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்ததாக, அதிகாரிகள் கூறினர்.
