நேபாளத்தில் தொடரும் மீட்பு பணிகள்; இன்னும் 4462 பேர் காணவில்லை; உறவினர்கள் கண்ணீர்

காத்மாண்டு: நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,066 ஆக உயர்ந்தது. அதேவேளையில், 4,462 பேரைக் காணவில்லை எனத் தெரியவந்த நிலையில், மீட்புப் பணிகள் நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளன. மாயமானவர்களின் உறவினர்கள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

நேபாளம் மற்றும் சீனா (திபெத்) எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பேரழிவில், மொத்தம் 4,462 பேர் காணாமல் போயுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

நேபாளத்தின் தேசிய மேலாண்மை ஆணையம் தங்களது நாட்டில் 3,916 பேர் காணாமல் போயுள்ளனர் என தெரிவித்துள்ளது. திபெத் பகுதியில் 546 பேர் காணவில்லை என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களில் இந்தியர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 844 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அடங்குவர். மீட்புப் படையினரால் இதுவரை இரண்டு நாடுகளிலும் சேர்த்து 1,066 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேபாளத்தில் 1,050 பேர் உடல்கள், திபெத்தில் 16 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.தற்போது மாயமானோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் மீட்புப் பணிகள் நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளன.

நேபாள ராணுவம், போலீசார் மற்றும் இந்தியா, கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச நிபுணர் குழுக்கள் இணைந்து ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

திரிசூலி ஆற்றுப் படுகையில் உள்ள நீர்மின் திட்ட சுரங்கங்களுக்குள் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உடைந்த பாலங்கள், சேதமடைந்த சாலைகள் மற்றும் மலைப்பாங்கான கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக உடல்களைத் தேடும் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மீட்பு படை அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு வெற்றிகரமான மீட்பும் இனி ஒரு அதிசயமாக இருக்கும்; சேறு, பாறைகள், வேரோடு சாய்ந்த மரங்கள் மற்றும் சிதைவுகளுக்கு அடியில் புதைந்திருந்த பகுதிகளில் மீட்புக் குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

அடர்ந்த இடிபாடுகளுக்கும் இறுகிய வண்டல் மண்ணுக்கும் அடியில் ஏழு நாட்கள் கழிந்த நிலையில், உயிருடன் யாரையும் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சாத்தியமற்றதாகிவிட்டது.

ஆனாலும், நாங்கள் தேடுதல் பணியைக் கைவிடவில்லை. எங்கள் குழுவினர் மோப்ப நாய்களுடன் வண்டல் மண் பரப்புகளைத் தேடி வருகின்றன, ஆனால் கள நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source link