புதுடில்லி: நேபாளத்தில் தங்களின் குடும்பத்தினரை இழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண ஏதுவாக, இந்தியாவிலேயே டிஎன்ஏ பரிசோதனை செய்யும் வசதியை மத்திய அரசு துவக்கியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 26ம் தேதியன்று நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1,259 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில், 12,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 5,000 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வெள்ளத்தினால் உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதால், டிஎன்ஏ பரிசோதனை செய்து, அதன்பிறகே, உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படுகிறது. தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதால், டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு உடல்களை ஒப்படைப்பதில் தாமதமும், பிணவறையில் இடவசதியும் இல்லாத நிலை ஏற்படுகிறது. எனவே, டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்த பின்னர், உடல்கள் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, உடல்களை அடையாளம் காண்பதற்காக, நேபாள அரசுக்கு இந்தியா சார்பில் டிஎன்ஏ பரிசோதனை உதவி வழங்கப்படுகிறது. இதற்காக, மத்திய மற்றும் மாநில தடயவியல் ஆய்வகங்களின் சேவைகளை இந்தியா வழங்கும் என்று வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் மாயமானவர்களின் தந்தை, தாய், மகன், மகள் அல்லது சகோதர, சகோதரிகள் இந்தியாவில் வசிக்கும் பட்சத்தில், அவர்கள், தங்கள் உயிரியல் மாதிரிகளை வழங்கி டிஎன்ஏ விவரக்குறிப்பை மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகங்கள், மாநில தடயவியல் ஆய்வகங்கள், தேசிய தடயவியல் அறிவியல் பல்கலை மற்றும் டிஎன்ஏ வசதிகொண்ட அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
நேபாள போலீசாரின் ஆலோசனையின்படி, சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ விவரங்களை அடையாளம் காணப்படாத உடல்களுடன் ஒப்பிடுவதற்காக, dnacodis@nepalpolice.gov.np என்ற மின்னஞ்சலுக்கும், உதவிக்காக eoikathmandufloodsupport@gmail.com என்ற முகவரிக்கும் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களுக்கு +977 9841 6160 95 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். எனத் தெரிவிக்கப்பபட்டுள்ளது.
