பிதூர்: வெள்ளம் பாதித்த பிதூர் பகுதியில் காணாமல் போன உறவினர்களை தேடி அலைபவர்களுக்கு உதவும் விதமாக, தொலைத்தொடர்பு சாதன உதவிகளை, இலவசமாக ஏற்படுத்தி கொடுத்துவரும் ‘யூத் இனிஷியேட்டிவ்’ என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 1,050 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர். மேலும், 4,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும், 8 மாவட்டங்களில் நடந்து வரும் மீட்பு பணிகளின் போது, மேலும் சடலங்கள் கண்டெடுக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரையில், 12,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கட்டமைப்புகளை முழுமையாக சூறையாடிய இந்த காட்டாற்று வெள்ளத்தில், வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் மட்டுமல்லாது, செல்போன் டவர்கள் போன்ற தொலைத்தொடர்பு வசதிகளையும் சீரழித்து விட்டது. எனவே, மக்கள் தொடர்பு கொள்ளவும், தங்களின் செல்போனை சார்ஜ் செய்ய முடியாத நிலையிலும் தவித்து வருகின்றன.
இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பிதூர் பகுதியில் காணாமல் போன உறவினர்களை தேடி அலைபவர்களுக்கு உதவும் விதமாக, தொலைத்தொடர்பு சாதன உதவிகளை அங்குள்ள இளைஞர்கள், ‘யூத் இனிஷியேட்டிவ்’ என்ற அமைப்பின் மூலம் வழங்கி வருகின்றனர். வெள்ளத்தில் செல்போன்களை இழந்தவர்களுக்கும், செல்போனில் சார்ஜ் தீர்ந்தவர்களுக்கும் உதவுவதற்காக, 10 கீபேடு செல்போன்களும், சோலார் பேட்டரிகள் மூலம் இயங்கும் செல்போன் சார்ஜிங் வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளனர். இது அங்கு உறவினர்களை தேடி அலைபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த செயல்களுக்காக அந்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
முதல் ஆளாக இந்தியா…
இதனிடையே, வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மனவேதனை அளிப்பதாகத் தெரிவித்த, நேபாளத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிஜி கார்ப் குளோபல் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வருண் சவுத்ரி, நிவாரணப் பொருட்கள், தற்காலிக வீடுகள் மற்றும் பள்ளிகள் அமைப்பதற்காக ரூ. 15 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
நிலநடுக்கம், கொரோனா மற்றும் தற்போதைய பேரிடர் என அனைத்து சோதனை காலங்களிலும், முதல் ஆளாக உதவியதற்காக பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறிய அவர், ஏற்கனவே 4 விமானங்களில் சுமார் 70 டன் நிவாரணப் பொருட்கள் மற்றும் சுரங்கப்பாதை நிபுணர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
