நேபாள வெள்ளத்தில் தப்பிய 28 பேர் கோவை திரும்பினர்: உறவினர்கள் மகிழ்ச்சி

கோவை: நேபாளம் வெள்ளப்பெருக்கில் உயிர் தப்பிய தமிழகத்தை சேர்ந்த குழுவினர், 28 பேர் இன்று செப்.1) கோவை வந்தடைந்தனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, 28 பேர் நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். அவர்களை பத்திரமாக மீட்ட இந்திய துாதரகம் மற்றும் தமிழக அரசுக்கு அனைவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

கோவை வந்தடைந்த குழுவில் இடம்பெற்ற திருப்பூரை சேர்ந்த மாரி முரளிதரன் கூறியதாவது:

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதியை இரண்டு நாட்களுக்கு முன் தான் கடந்து சென்றோம். வேறு பகுதிக்கு நாங்கள் சென்றதால் தப்பித்தோம். அங்கிருந்த கட்டடங்கள் காணாமல் போய் விட்டன. கடவுள் அருளால் தப்பினோம். தொலைதொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டு விட்டதால், உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.

எங்களை அழைத்து சென்ற டிராவல்ஸ் நிறுவனத்தினர் அனைத்து உதவிகளையும் செய்தனர். பத்திரமாக மீட்டு, சீனா எல்லை வழியாக திபெத் சென்றோம். அங்கிருந்து டில்லி திரும்பினோம்.

மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து பத்திரமாக கோவைக்கு அனுப்பி வைத்தனர். அரசுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமுருகன்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணக்குமார் கூறுகையில், ”எவ்வித பிரச்னையும் இல்லாமல் நாங்கள் திரும்ப மத்திய, மாநில அரசுகள் உதவின. தமிழக அமைச்சர் ராஜ்மோகன் தினமும் மூன்று முறை அழைத்து எங்கள் பயணத்தை உறுதி செய்தார். நேபாளத்தில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்,” என்றார்.

Source link