பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்திற்கு இடம் போதாது; பா.ஜ.க போராட்டம் நடத்தும்: நயினார் நாகேந்திரன்

அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்காக சுமார் ரூ.1,200 கோடி செலவில் பிரம்மாண்டமான நிர்வாக வளாகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் அமைய உள்ள புதிய நிர்வாக வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி கட்டுமானப் பரப்பில் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக 26 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய நிலங்கள் இந்தத் திட்டத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளன. திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. கட்டிட வடிவமைப்பு, விரிவான திட்ட அறிக்கை, கட்டுமான திட்டமிடல், சுற்றுச்சூழல் அம்சங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய தலைமைச் செயலகம் எந்த இடத்தில் அமையும் என்பது தொடர்பாக நந்தம்பாக்கம், கிண்டி ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. தற்போது பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. கடலை ஒட்டிய முக்கியமான பகுதியில் இந்தப் புதிய நிர்வாக வளாகம் அமைய இருப்பதால், இடத் தேர்வு குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. நிர்வாக ரீதியாக இது முக்கியமான திட்டமாக பார்க்கப்பட்டாலும், போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அம்சங்கள் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.

பா.ஜ.க போராட்டம் நடத்தும் 

இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்திற்கு அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல், அரசியல் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில், நாடாளுமன்றமே ரூ. 900 கோடியில் தான் கட்டப்பட்டுள்ளது என்றும், தலைமைச் செயலகத்திற்கு ரூ. 1,200 கோடியா? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். ‘துக்ளக் தர்பார் திட்டத்தை உடனே திரும்பப் பெறுக’ என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ. 1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற த.வெ.க அரசின் அறிவிப்பு, கள நிலவரத்திற்கு (யதார்த்தத்திற்கு) சற்றும் பொருந்தாததாகவே உள்ளது. நாட்டின் புதிய நாடாளுமன்றமே ரூ. 900 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், முறையான வரைபடமோ திட்டமிடலோ இன்றி ரூ. 1,200 கோடி என அறிவிக்கப்பட்டிருப்பது வெறும் கற்பனையே அன்றி வேறில்லை.

குறிப்பாக, 20 லட்சம் சதுர அடி கட்டடத்திற்கு உள்கட்டமைப்புடன் சேர்த்து 45 ஏக்கர் தேவைப்படும் சூழலில், அங்கு இருப்பதோ வெறும் 25 ஏக்கர் மட்டுமே. கிண்டியில் 35 ஏக்கர் மாற்று நிலம் இருந்தும், முதல்வர் திரு. விஜய் அவர்களின் வீட்டிற்கு அருகில் கட்ட வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்பட்ட இந்த நடைமுறைச் சாத்தியமற்ற திட்டம், சட்டத்தின் முன் ஒருபோதும் நிற்காத வெறும் மணல் கோட்டையே ஆகும்.

அதனை மீறி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், முள்ளிக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 1,500-க்கும் மேற்பட்ட பூர்வீக மீனவக் குடும்பங்களின் நிலங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தலின் போது பட்டா தருவதாக வாக்குறுதியளித்துவிட்டு, தற்போது தங்களை தவெக அரசு அப்புறப்படுத்த முயல்வதாக மீனவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர்.மேலும் ஆழிப்பேரலையால் (சுனாமி) பாதிக்கப்பட்ட இக்கடற்கரைப் பகுதியானது, அடையாறு சூழலியல் முகத்துவார மண்டலத்தையும், அரிய வகை ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முக்கிய இனப்பெருக்க வாழ்விடத்தையும் கொண்டிருப்பதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளுக்கு முரணாகக் கட்ட முயலும் இக்கட்டடம் சட்டத்தின் முன் நிற்காத ‘மணல்’ கோட்டையாகும்.

மேலும் இத்திட்டத்தால் சாந்தோம், பட்டினப்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம், அடையாறு வழியே நாள்தோறும் பயணிக்கும் பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான போக்குவரத்து முடக்கத்தால் பாதிக்கப்படும் அபாயமும் எழுந்துள்ளது. இப்படி அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கும் சூழலில், முதல்வரின் தனிப்பட்ட சௌகரியத்திற்காக மக்கள் நலனைப் பலிகடா ஆக்கும் இந்த “துக்ளக் தர்பார்” திட்டத்தை முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லையெனில், இத்திட்டத்தை எதிர்த்து மீனவ மக்களுடன் இணைந்து தீவிரப் போராட்டங்களை முன்னெடுக்கவும் தமிழக பா.ஜ.க தயங்காது.” என்று  பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார். 

Source link