பட்டினப்பாக்கம் வேண்டாம்.. 160 ஏக்கர் அரசு நிலமே இருக்கு! புதிய தலைமை செயலகம்.. சண்முகம் சொன்ன இடம்

சென்னை: புதிய தலைமை செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது முதலே பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே பட்டினப்பாக்கம் என்பது புதிய தலைமை செயலகத்திற்கு சரியான இடம் இல்லை என கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், அதற்கு பதிலாக கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் அருகே தலைமை செயலகத்தை கட்டலாம் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு தலைமை செயலகம் இப்போது சென்னை ராஜாஜி சாலையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1644ஆம் ஆண்டு கட்டப்பட்ட முதல் கோட்டையான இதில், தமிழக அரசின் சட்டமன்றம் மற்றும் பல்வேறு முக்கிய அமைச்சகங்களின் அலுவலகங்கள் செயல்படுகின்றன.

எனினும், தற்போதைய தலைமை செயலகத்தில் கடுமையான இடநெருக்கடி நிலவி வருவதாக கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே இடநெருக்கடி குறித்த புகார்கள் உள்ளன. இதன் காரணமாக புதிய தலைமை செயலகத்தை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக இருந்து வருகிறது. மேலும், புனித ஜார்ஜ் கோட்டை என்பது பழமையான கட்டிடம் என்பதால் அதன் பெரும்பகுதி இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் தேவையான புதிய கட்டுமானங்களை செய்ய முடிவதில்லை என்ற புகார்கள் உள்ளன.

இந்தச் சூழலில் தான் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அரசாணையும் வெளியிடப்பட்டது. அதில் சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் ₹1,200 கோடி மதிப்பீட்டில், 20 ஏக்கரில் புதிய தலைமை செயலக வளாகம் கட்டப்படும் என கூறப்பட்டு இருந்தது.

இதற்கிடையே புதிய தலைமை செயலகம் தேவை தான் என்றாலும் அதை கட்ட பட்டினப்பாக்கம் இடமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக கிண்டி ரேஸ் கோர்ஸில் தலைமை செயலகத்தை கட்டலாம் என்றும் அங்கு அரசுக்கு சொந்தமான இடம் 160 ஏக்கர் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும், “புதிய தலைமை செயலகத்தை கட்ட அந்த பட்டினப்பாக்கம் பொருத்தமான இடம் கிடையாது. ஏற்கனவே இருக்கக்கூடிய தலைமை செயலகம் போதுமான இடவசதி இல்லாமலும், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி இருக்கிறது என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. இதற்கு முந்தைய ஆட்சிகளிலும் தலைமை செயலகத்தை வேறு ஒரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்கிற முயற்சி நடந்தது. ஜெயலலிதா ஆட்சி காலத்திலும், கருணாநிதி ஆட்சி காலத்திலும் இதற்கான முயற்சி திரும்ப திரும்ப மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

இப்போது அவர்கள் புதிய தலைமை செயலகத்தை கட்ட வேண்டும்.. வேறு ஒரு இடத்தில் அமைக்க வேண்டும் என்கிறார்கள். அது தேவை என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் அதற்கு பொருத்தமான இடம் பட்டினப்பாக்கம் அல்ல. இதைவிட சிறந்த பல இடங்கள் சென்னை மாநகரத்திற்குள் இருக்கிறது. உதாரணத்திற்கு கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் 160 ஏக்கரில் இருக்கிறது. அந்த 160 ஏக்கரும் இப்போது அரசின் கையில் தான் இருக்கிறது.

இவர்கள் சொல்லும் பட்டினப்பாக்கத்தில் இருப்பதே 25 ஏக்கர் தான். அதிலும் மீனவர்களை அப்புறப்படுத்துவது, மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை கெடுப்பது இந்த மாதிரியான பலவிதமான பிரச்சினைகள் அங்கே உள்ளது. அங்கு வாழும் மக்களும் இதை தான் மிக தெளிவாக சொல்கிறார்கள். அதையெல்லாம் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகவே, பொருத்தமான வேறு ஒரு இடத்தில் தலைமை செயலகத்தை உருவாக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் நாங்க வலியுறுத்துகிறோம்” என்றார்.