“பட்டியலினத்தவர் 8 பேர் அமைச்சர் ஆனதால் எல்லாம் மாறும் என நம்புவது மூடநம்பிக்கை” – அமைச்சர் வன்னி அரசு

கோவை: “பட்டியலினத்தவர்கள் 8 பேர் அமைச்சராக வந்து விட்டோம் என்பதால் விடிவுகாலம் வந்துவிட்டது என நம்பவில்லை. 8 பேர் அமைச்சராக வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடும் என நம்புவது மூடநம்பிக்கை” என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.

கோவை பீளமேட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் அகிலன் (16) கடந்த 22-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் சாதிய கண்ணோட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செயல்பட்டதால் அகிலன் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டி அகிலனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று (அக்.26) மாலை அகிலனின் பெற்றோரிடம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார் ரூ. 6 லட்சம் காசோலை, அகிலனின் சகோதரிக்கு இளநிலை உதவியாளர் அரசுப் பணி ஆணையை வழங்கினார். முன்னதாக, இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது.

இதையடுத்து, மாணவர் அகிலன் சடலம் இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தாரிடம் இன்று (அக். 27) ஒப்படைக்கப்பட்டது.

அகிலனின் இல்லத்துக்கு நேரில் சென்ற சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு அஞ்சலி செலுத்தினார். அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தவர், மாணவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு கூறும்போது, “முதல்வர் வழிகாட்டுதலின் அடிப்படையில் வந்துள்ளேன். அகிலன் தற்கொலை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யாரும் தப்பிக்க முடியாது. எவ்வளவு பெரிய சாதி பின்புலம் இருந்தாலும் சிபிசிஐடி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் கொண்டுவரப்படுவார்கள்.

அகிலன் தற்கொலைக்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதைத் தான் நாங்களும் வலியுறுத்துகிறோம். சிபிசிஐடி விசாரணையை தொடர்ந்து அனைத்து சந்தேகங்களும், பிரச்சினைகளும் தீர்த்து வைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. குழப்பங்கள், தயக்கங்கள் இருப்பதால் முழுமையான விசாரணை முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

போராட்டக்களம் என்பது நீதி பெறுவதற்கான இடம், நான் அமைச்சரவையில் இருக்கிறேன். அமைச்சரவைக்குள் இருந்து என்னென்ன முடியுமோ அதை செய்கிறேன். அனைத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். பள்ளி, கல்லூரி வளாகங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது முதன்மையானது.

அரசில் பட்டியலினத்தோர் எத்தனை அமைச்சர்கள் என்பது கிடையாது. இந்த சமூக கட்டமைப்பு ஆயிரம் ஆண்டுகளாக சாதி கட்டமைப்பு கொண்டது.

பட்டியலினத்தவர்கள் 8 பேர் அமைச்சராக வந்துவிட்டோம் என்பதால் விடிவுகாலம் வந்துவிட்டது என நம்பவில்லை. இந்த சமூகம் சாதிய கட்டமைப்பு, சனாதன கட்டமைப்பை உடைக்க போராடுகிறோம். 8 பேர் அமைச்சராக வந்து விட்டால் எல்லாம் மாறிவிடும் என நம்புவது மூடநம்பிக்கை. சாதிய அழுக்குகளை, இந்துத்துவத்தை வேரறுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

சாதியப் பாகுபாடுகளை களைகின்ற வரை சமூக விடுதலைக்காக போராட வேண்டியிருக்கும். நீதியரசர் சந்துரு அறிக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என சட்டப்பேரவையில் பேசி இருக்கிறேன். பள்ளிகளில் நீண்ட காலமாக இருக்கின்ற சாதியப் பாகுபாடு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பள்ளிகளில் சாதிப்பெயர் இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியமானது, முதன்மையானது. அதை எடுப்பதற்கான முயற்சிகளை செய்வோம்” என்றார்.

Source link